2 முக்கிய நகரங்களின் பெயர்கள் மாற்றம் - பதவி விலகும் முன் உத்தவ் தாக்கரேவின் கடைசி நகர்வு!
|அவுரங்காபாத், ஒஸ்மானாபாத் நகரங்களின் பெயர்கள் மாற்றம் செய்ய மந்திரிசபை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.
மும்பை,
மராட்டியத்தில் நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த தடையில்லை என சுப்ரீம் கோர்ட் இன்று அதிரடி உத்தரவை பிறப்பித்தது.
சற்றுமுன், சுப்ரீம் கோர்ட் உத்தரவு வெளியான சில நிமிடங்களிலேயே பேஸ்புக் வாயிலாக உரையாற்றிய மராட்டிய முதல் மந்திரி உத்தவ் தாக்கரே, தனது பதவியை ராஜினாமா செய்வதாக திடீரென அறிவித்தார். இது பெரும் அதிர்ச்சியை கிளப்பியுள்ளது.
ஆளும் மகா விகாஸ் அகாடி கூட்டணியில் சிவசேனாவுடன் அங்கம் வகித்த காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கு தனது நன்றியை தெரிவித்துக்கொள்வதாகவும் தனது உரையின் போது குறிப்பிட்டார்.
முன்னதாக, மராட்டியத்தில் தொடரும் அரசியல் நெருக்கடிக்கு மத்தியில் உத்தவ் தாக்கரே தலைமை வகித்த மந்திரிசபை கூட்டம் இன்று (ஜூன் 29) நடைபெற்றது. இதில், தற்போதைய அரசியல் நிலவரம் மற்றும் சிவசேனா அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் குறித்து பேசப்பட்டதாக கூறப்படுகிறது.
இந்தநிலையில், அவுரங்காபாத் நகரம் சம்பாஜிநகர் எனவும், ஒஸ்மானாபாத் நகரம் தாராஷிவ் எனவும் பெயர் மாற்றம் செய்ய மந்திரிசபை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.
மேலும், நவி மும்பை சர்வதேச விமான நிலையத்திற்கு முன்னாள் விவசாயிகள் சங்க கட்சித் தலைவர் டி.பி பாட்டீல் பெயர் சூட்ட கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
முகலாய பேரரசர் அவுரங்கசீப் பெயரில் அவுரங்காபாத் நகரம் பெயர் வைக்கப்பட்டது. இந்நிலையில், சாம்பாஜி சத்ரபதி சிவாஜியின் மூத்த மகன். முகலாய பேரரசர் அவுரங்கசீப்பின் உத்தரவின் பேரில் அவர் கொல்லப்பட்டார், அவர் 17 ஆம் நூற்றாண்டில் அவுரங்காபாத் என்று அந்த பகுதியின் பெயரை சூட்டினார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஐதராபாத்தின் கடைசி ஆட்சியாளர் மீர் உஸ்மான் அலி கானின் பெயரால் பெயரிடப்பட்ட உஸ்மானாபாத், இப்போது அதன் அருகிலுள்ள 6-ஆம் நூற்றாண்டு குகைகளான தாராஷிவ்வில் இருந்து புதிய பெயராக தாராஷிவ் நகரம் என மாற்றப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.