< Back
தேசிய செய்திகள்
மத்திய பிரதேசத்தில் வெப்ப அலை தாக்கத்தால் 2 குழந்தைகள் உயிரிழப்பு
தேசிய செய்திகள்

மத்திய பிரதேசத்தில் வெப்ப அலை தாக்கத்தால் 2 குழந்தைகள் உயிரிழப்பு

தினத்தந்தி
|
30 May 2024 9:46 PM IST

மத்திய பிரதேசத்தில் வெப்ப அலை தாக்கத்தால் ஹீட் ஸ்ட்ரோக் பாதிப்பு ஏற்பட்டு 2 குழந்தைகள் உயிரிழந்துள்ளனர்.

போபால்,

வட இந்தியாவில் சமீப காலமாக கடும் வெப்ப அலை வீசி வருகிறது. குறிப்பாக ராஜஸ்தான், பீகார், மத்திய பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் வெப்ப அலையின் தாக்கம் கடுமையாக அதிகரித்துள்ளது. பிகாரின் ஷோக்பூரா பகுதியில் உள்ள பள்ளி ஒன்றில் நேற்று வெப்ப அலையின் தாக்கம் தாங்க முடியாமல் மாணவ, மாணவியர் பலர் அடுத்தடுத்து மயக்கம் அடைந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இந்த நிலையில் மத்திய பிரதேசத்தின் குவாலியர் மாவட்டத்தில் வெப்ப அலை காரணமாக ஏற்பட்ட ஹீட் ஸ்ட்ரோக் பாதிப்பால் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 2 குழந்தைகள் இன்று உயிரிழந்துள்ளனர். ஆட்டோ டிரைவரான ராம்பாபு சாகியா என்பவரின் 12 வயது மகன் மற்றும் 14 வயது மகள் ஆகிய இருவருக்கும் வெப்ப அலையின் தாக்கத்தால் நீர்ச்சத்து குறைந்து ஹீட் ஸ்ட்ரோக் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து அவர்களின் பெற்றோர் அவர்களை மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். ஆனால் மருத்துவமனையில் குழந்தைகளை பரிசோதித்த டாக்டர்கள், அவர்கள் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். இந்நிலையில், இனி வரும் காலங்களில் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருப்பதை உறுதி செய்ய தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு மத்திய பிரதேச மாநில அரசு அறிவுறுத்தியுள்ளது.

மேலும் செய்திகள்