இந்தூரில் மர்ம காய்ச்சலுக்கு இரண்டு குழந்தைகள் பலி
|இந்தூர் மாவட்டத்தில் மர்மக் காய்ச்சலால் 2 குழந்தைகள் உயிரிழந்தனர்.
இந்தூர்,
இந்தூர் மாவட்டத்தில் மர்மக் காய்ச்சலால் 2 குழந்தைகள் உயிரிழந்தனர். அவர்களுக்கு சிகிச்சையளித்த போலி மருத்துவர் நடத்திய சட்டவிரோத கிளினிக்கிற்கு அதிகாரிகள் சீல் வைத்துள்ளனர். பைகிராம் கிராமத்தைச் சேர்ந்த சிவன்ஷ் (வயது 5), யுவராஜ் (வயது 2) என்ற இரண்டு சகோதரர்கள் உயிரிழந்தனர். மேலும் யுவராஜின் இரட்டை சகோதரர் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருக்கின்றார்.
இதுகுறித்து மருத்துவ அதிகாரி டாக்டர் பைசல் அலி கூறும்போது, "குழந்தைகள் இருவருக்கும் காய்ச்சல் இருந்தது. ஆனால் வைரஸ் தொற்றா அல்லது பாக்டீரியாவா என்பது தெளிவாகத் தெரியவில்லை. நிபுணர்கள் இதுகுறித்து ஆய்வு செய்து வருகின்றனர்.
யுவராஜின் இரட்டை சகோதரர் அரசாங்கத்தால் நடத்தப்படும் சாச்சா நேரு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவர் காலராவால் பாதிக்கப்பட்டுள்ளதாக மருத்துவர்கள் சந்தேகிக்கின்றனர்.
குழந்தைகளுக்கு சிகிச்சை அளித்த போலி மருத்துவர் குழந்தைகள் இறந்ததையடுத்து தலைமறைவானார். அதிகாரிகள் அவரது கிளினிக்குக்கு சீல் வைத்தனர். இறந்த குழந்தைகளின் உடல்களை பிரேதப் பரிசோதனைக்காக தோண்டி எடுக்க முடியுமா என்பது குறித்து நிர்வாகத்துடன் சுகாதாரத் துறை ஆலோசனை நடத்தி வருகிறது.
அதிகாரிகள் ஆய்வுக்காக பைகிராமில் இருந்து தண்ணீரின் மாதிரிகளையும் சேகரித்து வருகின்றனர்" என்று கூறினார்.