காதலியை கவர்வதற்காக ஏடிஎம்மில் கொள்ளையடிக்க முயன்ற இருவர் கைது
|மேற்கு டெல்லியின் ரன்ஹோலா பகுதியில் உள்ள ஏடிஎம்மில் கொள்ளையடிக்க முயன்ற இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
புதுடெல்லி,
மேற்கு டெல்லியின் ரன்ஹோலா பகுதியில் உள்ள ஏடிஎம்மில் கொள்ளையடிக்க முயன்ற இருவரை போலீசார் கைது செய்தனர்.
இன்று அதிகாலை 2.15 மணியளவில், கேஸ் வெல்டரைப் பயன்படுத்தி இருவர் ஏடிஎம்மை கொள்ளையடிக்க முயற்சிப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து சம்பவ இடத்திற்குச் சென்ற போலீசார், இருவரும் தங்கள் உபகரணங்களை விட்டுவிட்டு தப்பியோடியதைக் கண்டறிந்தனர்.
அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளைப் பயன்படுத்தி கொள்ளையில் ஈடுபட்டவர்களை போலீசார் அடையாளம் கண்டு, ஹர்பூல் விஹார் பப்ரோலாவில் இருந்து அவர்களை கைது செய்தனர். அவர்கள் ராஜஸ்தான் மாநிலம் தவுசா மாவட்டத்தைச் சேர்ந்த கமல் (வயது 27), பர்வீன் (வயது 20) என அடையாளம் காணப்பட்டுள்ளது.
கமல் திருட்டுக்கு திட்டமிட்டதாகவும், தனது உறவினர் பர்வீனுடன் சேர்ந்து கேஸ் வெல்டர், எல்பிஜி சிலிண்டர் மற்றும் பிற கருவிகளை ஏற்பாடு செய்ததாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர். மேலும் பர்வீன் தனது காதலியை பணத்தால் ஈர்க்க விரும்பியதால் குற்றத்தை செய்ய ஒப்புக்கொண்டதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.