மங்களூருவில் மாடுகளை கடத்தும் கும்பலை கொல்ல திட்டமிட்ட 2 பேர் கைது
|மங்களூருவில் மாடுகளை கடத்துவதில் ஏற்பட்ட கோஷ்டி மோதலில் எதிர்தரப்பினரை கொல்ல திட்டமிட்ட 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
மங்களூரு-
மங்களூருவில் மாடுகளை கடத்துவதில் ஏற்பட்ட கோஷ்டி மோதலில் எதிர்தரப்பினரை கொல்ல திட்டமிட்ட 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
கொலை செய்ய திட்டம்
தட்சிண கன்னடா மாவட்டம் மங்களூரு அருகே பரங்கிப்பேட்டை அம்மெம்மர் மசூதி பகுதியில் வசித்து வந்தவர் ஹைதர் அலி (வயது 26). இவரது நண்பர் அதே பகுதியைச் சேர்ந்த தஸ்லிம் ஜோக்ரா மன்சில். இவர்கள் இருவரும் இறைச்சிக்காக மாடுகள் கடத்தியது, மாடுகளை திருடியது, கொலை முயற்சி உள்பட பல்வேறு குற்றச்சம்பவங்களில் ஈடுபட்டு வந்தனர். இதுதொடர்பாக இவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்திருந்தனர். பின்னர் 2 பேரும் ஜாமீனில் வெளி வந்தனர். இந்த நிலையில் இவர்கள் 2 பேரும் சட்டவிரோதமாக மாடுகள் கடத்தி வரும் இன்னொரு கும்பலைச் சேர்ந்தவர்களை கொலை செய்ய திட்டமிட்டு வந்ததாக கூறப்படுகிறது.
அதாவது இவர்களுக்கும், இன்னொரு கும்பலுக்கும் இடையே மாடுகள் கடத்துவது தொடர்பாக தகராறு இருந்து வந்துள்ளது. இதனால் இரு கும்பலும் அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்தனர். இந்த நிலையில் தான் ஹைதர் அலியும், தஸ்லிமும் சேர்ந்து எதிர்தரப்பினரை கொலை செய்ய திட்டமிட்டது போலீசாருக்கு தெரியவந்தது.
பரபரப்பு
அதையடுத்து மங்களூரு மாநகர குற்றப்பிரிவு போலீசார் ஹைதர் அலி, தஸ்லிம் ஆகிய 2 பேரையும் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து செல்போன்கள், கத்திகள், ஒரு வேன் என ரூ.5 லட்சத்து 21 ஆயிரம் மதிப்பிலான பொருட்களை பறிமுதல் செய்தனர். மேலும் இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள். இந்த சம்பவம் மங்களூருவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.