19 வயது இளம்பெண் பலாத்காரம், வீடியோ, மிரட்டல்... 4 சிறுவர்கள் அட்டூழியம்
|ஜார்க்கண்டில் இளம்பெண் பலாத்கார சம்பவத்தில் ஈடுபட்ட சிறுவர்கள் அனைவரும் 15 வயது முதல் 17 வயதுக்கு உட்பட்டவர்கள் ஆவர்.
ராம்கார்,
ஜார்க்கண்டின் ராம்கார் பகுதியில் ராம்கார் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் நிலக்கரியை போட்டு வைக்கும் கிடங்கு ஒன்று உள்ளது. இந்த கிடங்கில் உள்ள மறைவான பகுதிக்கு 19 வயது இளம்பெண் ஒருவரை, 4 சிறுவர்கள் இழுத்து சென்றனர்.
அவரை 4 பேரும் பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். எனினும், கடந்த ஏப்ரல் 21-ந்தேதி நடந்த இந்த சம்பவம் பற்றி இளம்பெண் போலீசில் புகார் எதுவும் தெரிவிக்கவில்லை. இந்த சம்பவத்தில் ஈடுபட்ட சிறுவர்கள் அனைவரும் 15 வயது முதல் 17 வயதுக்கு உட்பட்டவர்கள் என தெரிய வந்துள்ளது.
இதுபற்றி ராம்கார் போலீஸ் சூப்பிரெண்டு விமல் குமார் கூறும்போது, அவர்கள் 4 பேரும், இந்த விசயம் பற்றி வெளியே கூறினால், ஆபாச வீடியோவை சமூக ஊடகத்தில் பதிவிட்டு விடுவோம் என இளம்பெண்ணை மிரட்டியுள்ளனர். இதனால், அவர் போலீசிடம் செல்லவில்லை.
ஆனால், கடந்த 3-ந்தேதி அந்த சிறுவர்கள் வீடியோவை சமூக ஊடகத்தில் பகிர்ந்தனர் என கூறியுள்ளார். இதனை தொடர்ந்து, நேற்று முன்தினம் அந்த இளம்பெண்ணின் குடும்பத்தினர் போலீசில் புகார் அளித்தனர்.
இதன் அடிப்படையில் விசாரித்து வந்த போலீசார் 4 குற்றவாளிகளையும் கைது செய்துள்ளனர். அவர்கள் பின்னர், கூர்நோக்கு இல்லத்திற்கு கொண்டு செல்லப்பட்டனர் என கூறியுள்ளார். இந்த சம்பவத்தில், தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.