மர்ம காய்ச்சலுக்கு 19 வயது பெண் பலி
|வன நோய் என்பது உண்ணிகளின் வழியாக பரவக்கூடிய ஒரு வகை தொற்றுநோய் ஆகும்.
பெங்களூரு,
கர்நாடக மாநிலம் சிவமொக்கா மாவட்டத்தைச் சேர்ந்த 19 வயது பெண்ணுக்கு திடீரென உடல்நிலை பாதிக்கப்பட்டது. மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்தநிலையில் அவர் மர்ம காய்ச்சல் காரணமாக உயிரிழந்ததாக அம்மாநில சுகாதார துறை தெரிவித்துள்ளது.
உடுப்பி மாவட்டம் மனிபால் கேஎம்சி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த அவருக்கு கியாசனூர் வன நோய் தொற்று இருப்பது கடந்த 4-ம் தேதி உறுதி செய்யப்பட்டது. கியாசனூர் வன நோய் என்பது உண்ணிகளின் வழியாக பரவக்கூடிய ஒரு வகை தொற்றுநோய் ஆகும்.
அனலெகொப்பா என்கிற பகுதியில் பாக்கு சேகரிப்புக்காகச் சென்ற பெண்ணுக்கு கடந்த ஆண்டு டிசம்பர் 26-ம் தேதி காய்ச்சல் ஏற்பட்டது. சிகிச்சையால் ஆரம்பத்தில் முன்னேற்றம் ஏற்பட்டாலும் டிச.30-ம் தேதி முதல் உடல் நலன் மோசமாகியுள்ளது. அவருக்கு மூளை காய்ச்சல் ஏற்பட்டது. இதனிடையே கியாசனூர் வன நோய் சோதனையில் முதலில் எதிர்மறையாக வந்த முடிவு இரண்டாவது சோதனையில் அவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. இந்த நிலையில் கேஎம்சி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.