கடும் பனிமூட்டம்; ராஞ்சி விமான நிலையத்தில் 19 விமானங்கள் ரத்து
|ஜார்கண்டில் அடுத்த 2 நாட்களுக்கு பனிப்பொழிவு நீடிக்கும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
ராஞ்சி,
வட இந்திய மாநிலங்களில் கடந்த சில நாட்களாக கடும் பனிப்பொழிவு நிலவி வருகிறது. குறிப்பாக டெல்லி, பஞ்சாப், அரியானா, உத்தர பிரதேசம், பீகார், ஜார்க்கண்ட் உள்ளிட்ட மாநிலங்களில் கடுமையான குளிர் வாட்டி எடுத்து வருகிறது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது.
அந்த வகையில் ஜார்க்கண்ட் மாநிலத்தின் தலைநகர் ராஞ்சியில் கடும் பனிப்பொழிவு நிலவி வருகிறது. இதன் காரணமாக ஜார்கண்டில் இன்று ஆரஞ்ச் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அடுத்த 2 நாட்களுக்கு பனிப்பொழிவு நீடிக்கும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் நேற்று ராஞ்சி விமான நிலையத்தில் கடும் பனிமூட்டம் காரணமாக 19 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. மேலும் 2 விமானங்கள் வேறு விமான நிலையத்திற்கு திருப்பி விடப்பட்டன. விமானங்கள் ரத்து செய்யப்பட்டதால் பயணிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகினர்.