என்ஜினீயரிங் படிப்புகளில் சேர 1.86 லட்சம் பேர் விண்ணப்பம்: கடந்த ஆண்டை விட அதிகம்
|என்ஜினீயரிங் படிப்பில் சேருவதற்கான நேற்று மாலை வரையில் ஒரு லட்சத்து 86 ஆயிரம் பேர் விண்ணப்பித்திருந்தனர். இது கடந்த ஆண்டைவிட அதிகமாகும்.
சென்னை,
2023-24-ம் கல்வியாண்டில் பி.இ., பி.டெக். போன்ற என்ஜினீயரிங் படிப்புகளில் உள்ள ஒரு லட்சத்து 57 ஆயிரம் இடங்களில் சேருவதற்கான விண்ணப்பப்பதிவை கடந்த மாதம் (மே) 5-ந் தேதி உயர் கல்வித்துறை அமைச்சர் க.பொன்முடி தொடங்கிவைத்தார். ஆன்லைன் மூலம் விண்ணப்பப்பதிவு தொடங்கியதில் இருந்து மாணவ-மாணவிகள் ஆர்வமுடன் விண்ணப்பித்து வந்ததை பார்க்க முடிந்தது.
முதல் நாளில் 8 ஆயிரத்து 668 பேர் விண்ணப்பப் பதிவை மேற்கொண்டு இருந்தனர். அதனைத் தொடர்ந்து ஒவ்வொரு நாளும் குறைந்தது சுமார் 3 ஆயிரம் முதல் அதிகபட்சம் 16 ஆயிரம் பேர் வரை விண்ணப்பித்தனர். இந்தநிலையில் கடந்த மாதம் 5-ந் தேதி தொடங்கிய விண்ணப்பப்பதிவு நேற்றுடன் நிறைவு பெற்று இருக்கிறது.
1.86 லட்சம் பேர் விண்ணப்பம்
விண்ணப்பப்பதிவை பொறுத்தவரையில் 2 லட்சத்து 28 ஆயிரத்து 122 பேர் மேற்கொண்டு இருப்பதாகவும், அதில் 1 லட்சத்து 86 ஆயிரத்து 209 மாணவ-மாணவிகள் விண்ணப்ப கட்டணத்தை செலுத்தியிருப்பதாகவும், அவர்களில் 1 லட்சத்து 54 ஆயிரத்து 728 பேர் சான்றிதழ்களை பதிவேற்றம் செய்துள்ளதாகவும் தமிழ்நாடு என்ஜினீயரிங் மாணவர் சேர்க்கை அலுவலகம் தெரிவித்துள்ளது.
விண்ணப்ப கட்டணத்தை செலுத்துபவர்கள்தான் விண்ணப்பித்ததற்கான எண்ணிக்கையாக கணக்கில் கொள்ளப்படும். இதன்படி பார்க்கையில், இந்த ஆண்டில் ஒரு லட்சத்து 86 ஆயிரத்து 209 மாணவ-மாணவிகள் விண்ணப்பித்திருப்பதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. கடந்த ஆண்டில் 1 லட்சத்து 69 ஆயிரம் பேர் விண்ணப்பித்திருந்தனர். அந்தவகையில் தற்போதையை புள்ளிவிவரங்களின்படி, கடந்த ஆண்டைவிட 17 ஆயிரம் பேர் அதிகமாக விண்ணப்பித்துள்ளனர்.
தரவரிசை பட்டியல்
இந்த தகவல் நேற்று மாலை 6 மணி வரையிலான நிலவரப்படி எடுக்கப்பட்டது ஆகும். விண்ணப்பப்பதிவு மற்றும் விண்ணப்ப கட்டணம் செலுத்துவதற்கு நேற்று இரவு 12 மணி வரை அவகாசம் வழங்கப்பட்டது. விண்ணப்ப கட்டணம் செலுத்தியவர்கள் சான்றிதழ்களை பதிவேற்றம் செய்ய வருகிற 9-ந் தேதி (வெள்ளிக்கிழமை) வரை அவகாசம் வழங்கப்பட்டு இருக்கிறது.
இதற்கிடையில் அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் ரேண்டம் எண் நாளை (செவ்வாய்க்கிழமை) ஒதுக்கப்படுகிறது. சேவை மையங்கள் வாயிலாக இணையதளத்தில் சான்றிதழ்கள் வருகிற 20-ந் தேதி வரை சரிபார்க்கப்பட உள்ளது. இதைத் தொடர்ந்து வருகிற 26-ந் தேதி தரவரிசை பட்டியல் வெளியிடப்பட இருக்கிறது.
கலந்தாய்வு
இதையடுத்து அடுத்த மாதம் (ஜூலை) 2-ந் தேதி முதல் கலந்தாய்வு தொடங்குகிறது. முதலில் மாற்றுத்திறனாளி, முன்னாள் படைவீரர்கள், விளையாட்டு பிரிவினர் ஆகியோருக்கான சிறப்பு பிரிவினருக்கான கலந்தாய்வு 2-ந் தேதி முதல் 5-ந் தேதி வரை நடக்கிறது.
அதன்பின்னர், பொது கலந்தாய்வு அடுத்த மாதம் 7-ந் தேதி முதல் ஆகஸ்டு மாதம் 24-ந் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த கலந்தாய்வில் நிரப்பப்படாத இடங்கள் அடுத்ததாக ஆகஸ்டு மாதம் 28-ந் தேதி முதல் 30-ந் தேதி வரை நடத்தப்படும் துணை கலந்தாய்வில் நிரப்பப்படும். தொடர்ந்து எஸ்.சி.ஏ. காலியிடம் எஸ்.சி.க்கு மாற்றப்பட்டு அந்த இடங்களுக்கு செப்டம்பர் 1-ந் தேதி முதல் 3-ந் தேதி வரை கலந்தாய்வு நடத்தப்பட இருக்கிறது. அன்றைய தினத்துடன் என்ஜினீயரிங் படிப்புக்கான கலந்தாய்வு நிறைவு பெறுகிறது