காசி தமிழ் சங்கமத்தில் பங்கேற்க 1,857 கி.மீ. தூரம் மோட்டார் சைக்கிளில் சென்ற தமிழக தம்பதி
|காசி தமிழ் சங்கமம் ஏற்படுத்திய தாக்கத்தால் வெறும் 32 மணி நேரத்தில் 1857 கிலோமீட்டர் மோட்டார் பைக்கில் பயணம் செய்த தமிழகத்தை சேர்ந்த தம்பதி காசி சென்றுள்ளனர்.
உத்தரபிரதேசத்தின் காசியில் தமிழ் சங்கமம் என்ற நிகழ்ச்சி நடந்து வருகிறது. இந்த நிகழ்ச்சியை பிரதமர் நரேந்திரமோடி தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியை நேரில் பார்க்கும் ஆர்வத்துடன், ஓசூரில் இருந்து காசிக்கு தமிழகத்தை சேர்ந்த தம்பதி ராஜன் - ராமலட்சுமி தம்பதி மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளனர்.
ஓசூரில் இருந்து பயணத்தை தொடங்கி, இடையில் உணவுக்காகவும் எரிபொருளுக்காகவும் செலவிட்ட நேரத்தையும் சேர்த்து, 32 மணி நேரத்தில் 1,857 கி.மீ. தூரம் பயணம் செய்து காசியை அவர்கள் சென்றடைந்தனர். இதுகுறித்து அவர்கள் கூறுகையில், 'இந்த பயணம் எங்களின் திருப்திக்காக மேற்கொள்ளப்பட்டது, சாதனை புத்தகத்தில் பதிவதற்காக அல்ல. காசிக்கும், தமிழ்நாட்டுக்கும் உள்ள உறவு பற்றி தமிழ்நாட்டில் இருக்கும்போது கூட எங்களால் இவ்வளவு விஷயங்களை தெரிந்துகொள்ள முடியவில்லை. இங்கே நிறைய விஷயங்களை தெரிந்து கொண்டிருக்கிறோம். காசி தமிழ் சங்கமம் நிகழ்வை காண்பது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது' என்று பூரிப்புடன் தெரிவித்தனர். கடந்த ஓராண்டாக மோட்டார் சைக்கிளில் இந்தியாவின் பல்வேறு பகுதிகளை பார்வையிட்ட இவர்கள் தற்போது நேபாளம் செல்ல திட்டமிட்டனர்.