செல்ஃபி எடுக்க முயன்ற போது ஆற்றில் மூழ்கி இளம்பெண் பலி - மேலும் இருவர் மாயம்
|மத்தியப்பிரதேசம் நர்மதா ஆற்றில் செல்ஃபி எடுக்க முயன்ற போது இளம்பெண் மூழ்கி உயிரிழந்தார்.
ஜபல்பூர்,
மத்தியப் பிரதேசம் மாநிலம் ஜபல்பூர் அருகே நர்மதா ஆற்றில் 18 வயது இளம்பெண் ஒருவர் செல்ஃபி எடுக்க முயன்றபோது மூழ்கி உயிரிழந்தார். மேலும் அவரைக் காப்பாற்ற ஆற்றில் குதித்த இருவரை காணவில்லை என்று போலீசார் தெரிவித்தனர்.
முன்னதாக ராகேஷ் ஆர்யா (வயது 31) என்ற ஆசிரியர் சில மாணவர்களை பாராமெடிக்கல் படிப்பில் சேர்ப்பதற்காக அவர்களுடன் ஜபல்பூர் வந்துள்ளார். அப்போது இந்த குழுவினர் பெடகாத்திற்குச் சென்றுள்ளனர். அங்கு குஷ்பு சிங் என்ற பெண் செல்ஃபி எடுக்க முயன்ற போது நர்மதா ஆற்றில் விழுந்தார்.
குஷ்புவை காப்பாற்ற ராகேஷ் ஆர்யா மற்றும் ராம் சாஹூ (வயது 17) இருவரும் ஆற்றில் குதித்தனர். இதையடுத்து மூவரும் காணாமல் போயினர். காணாமல் போனவர்களை உள்ளூர் மீனவர்கள் தேடிய போது குஷ்புவின் உடல் மீட்கப்பட்டது. மற்ற இருவரின் நிலை குறித்து தெரியவில்லை.
தற்போது அவர்களை நீர்மூழ்கிக் குழுவினர் தேடி வருகின்றனர். இந்த நிலையில் மத்திய பிரதேச முதல் மந்திரி சிவராஜ் சிங் சவுகான் இந்த சம்பவத்திற்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.