'திரில்லிங் அனுபவம்' என்று நண்பன் செய்த செயல்... ஓவர்டோஸ் போதை மருந்தால் பரிதாபமாக உயிரிழந்த இளம்பெண்
|ஓவர்டோஸ் போதைமருந்தை கொடுத்து பெண்ணை கொலை செய்திருக்கலாம் என விவேக் மவுரியா மீது பெண்ணின் குடும்பத்தினர் குற்றம்சாட்டுகின்றனர்.
லக்னோ:
உத்தர பிரதேச மாநிலம் லக்னோவின் மகாநகர் பகுதியில் வசித்து வந்த 18 வயது இளம்பெண், பெங்களூருவில் வேலை பார்த்து வந்தார். கடந்த 3-ம் தேதி லக்னோ வந்திருந்த அவர் 7-ம் தேதி மீண்டும் பெங்களூரு புறப்பட்டார். அப்போது அவரது நண்பர் விவேக் மவுரியாவை (வயது 28) சந்தித்துள்ளார். போதைப்பழக்கத்திற்கு அடிமையான இருவரும் திவாரிகஞ்ச் பகுதியில் உள்ள காலியிடத்திற்கு சென்று போதை மருந்து செலுத்தி உள்ளனர்.
அப்போது இளம்பெண்ணுக்கு போதை மருந்து ஓவர்டோஸ் ஆனதால் மயங்கி விழுந்துள்ளார். இதனால், நண்பர் விவேக் மவுரியா, காவல்துறை உதவி எண்ணை தொடர்பு கொண்டு உதவி கேட்டுள்ளார். போலீசார் விரைந்து வந்து, இளம்பெண்ணை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள், அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதனால் பயந்துபோன விவேக், மருத்துவமனையில் இருந்து தப்பிச் சென்றுள்ளார். பின்னர் அவரை இந்திரா கால்வாய் பகுதியில் போலீசார் கைது செய்தனர்.
காக்டெய்ல் போதை மருந்து ஓவர்டோஸ் ஆனதால் பெண்ணின் நிலை மோசமடைந்தது என்றும், அந்த வாலிபரும் அதிக போதையில் இருந்ததாகவும் போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஓவர்டோஸ் போதை மருந்தை கொடுத்து பெண்ணை கொலை செய்திருக்கலாம் என விவேக் மீது பெண்ணின் குடும்பத்தினர் குற்றம்சாட்டுகின்றனர். பெண்ணின் தாயார் அளித்த புகாரின் பேரில், போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அப்போது, திரில்லிங் அனுபவமாக இருக்கும் என்று நினைத்து செலுத்தப்பட்ட காக்டெய்ல் போதை மருந்து தவறாகிவிட்டதாக போலீசாரிடம் விவேக் வாக்குமூலம் அளித்துள்ளார்.
"பெங்களூரு செல்வதற்காக வீட்டை விட்டு வெளியேறும்போது, தோழி என்னை அழைத்து போதை மருந்து உட்கொள்ளவேண்டும் என்று கேட்டார். அதனால் திவாரிகஞ்ச் பகுதியில் உள்ள என் நண்பரின் காலி மனைக்கு அழைத்துச் சென்று முதலில் நான் அந்த மருந்தை செலுத்தினேன். பின்னர், அவளுக்கு செலுத்தினேன்" என்று விவேக் கூறியுள்ளார்.