சக்லேஷ்புராவில் வெவ்வேறு வழக்குகளில் 18 பேர் கைது
|சக்லேஷ்புரா போலீசார் வெவ்வேறு வழக்குகளில் 18 பேரை கைது செய்துள்ளதாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிராம் சங்கர் தெரிவித்தார்.
ஹாசன்:-
எருமை மாட்டை சுட்டனர்
ஹாசன் மாவட்டம் சக்லேஷ்புரா தாலுகா ஹானுபாலு ஹோப்ளி கியாமனஹள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் தயாநிதி. கடந்த மாதம்(ஜூன்) 27-ந் தேதி இவருக்கு சொந்தமான எருமை மாட்டை சிலர் துப்பாக்கியால் சுட்டு கொன்று உடலை இறைச்சியாக கடத்திச் சென்றனர். இதுதொடர்பாக தயாநிதி அளித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும் இதுதொடர்பாக ஹானுபாலு கிராமத்தைச் சேர்ந்த சமீர், முகமது ஆகிய 2 பேரை போலீசார் கைதுசெய்தனர்.
இந்த நிலையில் இவ்வழக்கு தொடர்பாக தலைமறைவாக இருந்த சஜ்ஜான், அஷ்ரப், உஜ்ஜிதா, அப்துல், சலாம் சகரியா ஆகிய 5 பேரை நேற்று காலையில் கைது செய்தனர்.
பறிமுதல்
மேலும் காரில் கஞ்சாவை கடத்தி விற்பனை செய்து வந்ததாக 2 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்கள் முகமது கான்(வயது 22) மற்றும் சலாம் ஜமீர்(30) ஆகியோர் ஆவர். அவர்களிடமிருந்து கஞ்சா இலைகளையும், ரூ.25 ஆயிரம் மதிப்பிலான 580 கிராம் கஞ்சா பொட்டலங்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர். இதுபோல் சக்லேஷ்புரா போலீஸ் நிலைய போலீசார் உதவி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மமதா தலைமையில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது காரில் கஞ்சா கடத்தி விற்பனை செய்த 6 பேரை கைது செய்தனர். அவர்களிடமிருந்து ரூ.52 ஆயிரத்து 290 ரொக்கம், 3 மோட்டார் சைக்கிள்கள், ஒரு கார், 800 கிராம் கஞ்சா பொட்டலங்கள் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.
மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு
இதுதவிர சக்லேஷ்புரா தாலுகா ஹொலேதிம்மனஹள்ளி கிராமத்தில் புறநகர் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு சூதாட்டத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்த நாகேஷ், சீனிவாஸ், சந்து, எல்.நாகேஷ், குமாரசாமி, மகேஷ், அசோக், யோகேஷ், மோகன் ஆகிய 9 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் பசுவதை தடை சட்டம் குறித்து கலவரத்தை தூண்டும் வகையில் முகநூல்(பேஸ்புக்) கணக்கில் கருத்தை பதிவிட்ட சுவாமி(34) என்பவரையும் போலீசார் கைது செய்தனர்.
மொத்தம் வெவ்வேறு வழக்குகளில் 22 பேரை சக்லேஷ்புரா போலீசார் கைது செய்திருந்தனர். அவர்கள் மீது வழக்குப்பதிந்து தொடர்ந்து போலீசார் விசாரித்து வருகிறார்கள் என்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிராம் சங்கர் தெரிவித்தார்.