நாட்டு வெடிகுண்டு வெடித்து 17-வயது சிறுவனின் 2 கைகள் துண்டாகின - திருவனந்தபுரத்தில் பரபரப்பு
|திருவனந்தபுரத்தில் நாட்டு வெடிகுண்டு வெடித்து 17-வயது சிறுவனின் 2 கைகள் துண்டான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
திருவனந்தபுரம்,
கேரள மாநிலம் திருவனந்தபுரம் மாவட்டம் மண்ணந்தலை பகுதியில் ரகசிய இடத்தில் வைத்து சிலர் நாட்டு வெடிகுண்டுகளை தயாரித்துக் கொண்டிருந்தனர். அப்போது, எதிர்பாராத விதமாக குண்டுகள் வெடித்து சிதறின. இந்த விபத்தில் நெடுமங்காட்டை சேர்ந்த 17 வயது சிறுவனின் 2 கைகளும் துண்டாகின.
மேலும், அவனுடன் இருந்த அகிலேஷ் (வயது18)என்ற வாலிபருக்கு பலத்த காயமும், கிரண், சரத் ஆகிய 2 பேருக்கு லேசான காயமும் ஏற்பட்டது. இதில் கிரண், சரத் ஆகிய 2 பேரும் காயத்துடன் அங்கிருந்து தப்பிச் சென்றனர். இதுபற்றி தகவல் அறிந்த போலீசார் விரைந்து வந்து கை துண்டான நிலையில் உயிருக்கு போராடிய சிறுவன் மற்றும் அகிலேஷ் ஆகிய 2 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக அருகில் உள்ள ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
தப்பியோடிய கிரண், சரத் ஆகிய 2 பேரையும் மடக்கி பிடித்து கைது செய்தனர். வெடிகுண்டு தயாரிப்பில் ஈடுபட்ட 4 பேரின் பெயர்களும் ரவுடி பட்டியலில் உள்ளதும், அவர்கள் மீது வஞ்சியூர் போலீஸ் நிலையத்தில் மோட்டார் சைக்கிள் திருட்டு வழக்கு உள்ளதாகவும் போலீசார் தெரிவித்தனர். நாடாளுமன்ற தேர்தலின்போது வன்முறையில் ஈடுபட்டு சீர்குலைக்க நாட்டு வெடிகுண்டு தயாரித்தார்களா என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.