கர்நாடகத்தில் 7 மாதங்களில் ரூ.17 ஆயிரம் கோடிக்கு மது விற்பனை
|கர்நாடகத்தில் கடந்த 7 மாதத்தில் ரூ.17 ஆயிரம் கோடிக்கு மது விற்பனை நடந்துள்ளது. பீர் குடிப்பவர்களின் எண்ணிக்கை 59 சதவீதம் அதிகரித்து இருப்பதாக கலால்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பெங்களூரு:
ரூ.2,333 கோடிக்கு கூடுதல் மது விற்பனை
கர்நாடகத்தில் அரசு மற்றும் தனியார் மூலமாக மது விற்பனை நடைபெற்று வருகிறது. 2022-23-ம் ஆண்டில் மதுபானம் விற்பனை மூலமாக ரூ.29 ஆயிரம் கோடி வருமானம் ஈட்டுவதற்கு கலால்துறை இலக்கு நிர்ணயித்துள்ளது. இந்த நிலையில், கடந்த ஏப்ரல் மாதத்தில் இருந்து அக்டோபர் மாதம் வரையிலான 7 மாதத்தில் மட்டும் ரூ.16,948 கோடிக்கு மது விற்பனை நடைபெற்றுள்ளது.
கடந்த ஆண்டு (2021) ஏப்ரல் முதல் அக்டோபர் மாதம் வரையிலான மது விற்பனையை ஒப்பிடுகையில், தற்போது ரூ.2,333 கோடிக்கு கூடுதலாக மது விற்பனை நடைபெற்றிருப்பதாக கலால்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 7 மாதத்திலேயே ஏறக்குறைய ரூ.17 ஆயிரம் கோடி வரை மது விற்பனை நடைபெற்றிருப்பதால், இன்னும் 5 மாதத்தில் ரூ.29 ஆயிரம் கோடிக்கு மது விற்பனை செய்ய வேண்டும் என்ற இலக்கை எளிதாக அடையலாம் என்பது கலால்துறையின் எதிர்ப்பார்ப்பாகும்.
பீர் குடிப்போரின் எண்ணிக்கை அதிகம்
கர்நாடகத்தில் கடந்த ஆண்டை காட்டிலும், இந்த ஆண்டு மது விற்பனை அதிகமாக நடைபெற்றிருந்தாலும், மது பிரியர்கள் பீர் குடிப்பதையே அதிகம் விரும்புவதாக கலால்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதாவது விஸ்கி, பிராந்தி, ரம் போன்ற மது வகைகளை விட பீர் குடிப்பதில் கடந்த 7 மாதத்தில் ஆர்வம் காட்டியதால், அதிகஅளவு பீர் விற்பனை நடைபெற்றிருப்பதாகவும் கலால்துறையினர் தெரிவித்துள்ளனர். அதன்படி, கடந்த 7 மாதத்தில் மட்டும் 214.28 லட்சம் பெட்டி பீர் விற்பனை நடந்துள்ளது.
கடந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் இருந்து அக்டோபர் மாதம் வரை 80.07 லட்சம் பெட்டி பீர் விற்பனை ஆகி இருந்தது. இதன்மூலம் கடந்த 7 மாதத்தில் பீரை விரும்பி குடிப்போரின் எண்ணிக்கை 59 சதவீதம் உயர்ந்திருப்பதாக கலால்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஆனால் விஸ்கி, பிராந்தி, ரம் போன்ற மது வகைகளை குடிப்போரின் எண்ணிக்கை 7.64 சதவீதம் மட்டும் உயர்ந்திருப்பதும் தெரியவந்துள்ளது. இந்த ஆண்டு திருமணங்கள் உள்ளிட்ட விருந்து நிகழ்ச்சிகள், மழை காரணமாக கடந்த 7 மாதத்தில் மது விற்பனை அதிகமாக நடக்க காரணம் என்றும் கலால்துறையினர் தெரிவித்துள்ளனர்.