< Back
தேசிய செய்திகள்
வாரத்துக்கு 5 நாள் பணி கோரிக்கையும் பரிசீலனை: வங்கி ஊழியர்களுக்கு 17 சதவீத சம்பள உயர்வு
தேசிய செய்திகள்

வாரத்துக்கு 5 நாள் பணி கோரிக்கையும் பரிசீலனை: வங்கி ஊழியர்களுக்கு 17 சதவீத சம்பள உயர்வு

தினத்தந்தி
|
9 March 2024 5:43 AM IST

வங்கி ஊழியர்களுக்கு 17 சதவீத சம்பள உயர்வு அளிக்கப்படுகிறது. இது 2022-ம் ஆண்டு நவம்பர் முதல் அமலுக்கு வருகிறது.

புதுடெல்லி,

சம்பள உயர்வு மற்றும் வாரத்தில் 5 நாட்கள் பணி போன்ற கோரிக்கைகளை வங்கி ஊழியர்கள் நீண்ட காலமாக வலியுறுத்தி வந்தனர்.

இது தொடர்பாக மத்திய அரசுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தையும் நடந்து வந்தது. இதில் ஊதிய உயர்வு கோரிக்கைக்கு தீர்வு காணப்பட்டு இருக்கிறது.

அந்தவகையில் வங்கி ஊழியர்களுக்கு 17 சதவீத சம்பள உயர்வு வழங்க மத்திய அரசு ஒப்புக்கொண்டுள்ளது. இது தொடர்பாக இந்திய வங்கிகள் சங்கம் மற்றும் வங்கி ஊழியர் சங்கங்களுடன் ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது.

இதன் மூலம் நாடு முழுவதும் 8 லட்சம் ஊழியர்கள் பயனடைவார்கள். இந்த ஊதிய உயர்வு 2022-ம் ஆண்டு நவம்பர் மாதம் முதல் முன்தேதியிட்டு அமல்படுத்தப்படுகிறது.

இந்த ஊதிய உயர்வால் பொதுத்துறை வங்கிகளுக்கு ஆண்டுக்கு கூடுதலாக ரூ.8,284 கோடி செலவாகும் என மதிப்பிடப்பட்டு உள்ளது.

இதைப்போல வாரத்துக்கு 5 நாட்கள் பணி (சனி, ஞாயிறு விடுமுறை) குறித்த கோரிக்கையும் மத்திய அரசின் பரிசீலனையில் இருப்பதாகவும், அந்தவகையில் வங்கிகளின் மாற்றியமைக்கப்பட்ட வேலை நேரம் தொடர்பாக அரசின் அறிவிப்பு வெளியான பிறகு இது அமலாகும் என்றும் அகில இந்திய வங்கி அதிகாரிகள் கூட்டமைப்பு தெரிவித்து உள்ளது.

இது தொடர்பாக அந்த அமைப்பு வெளியிட்ட அறிக்கையில், '8088 புள்ளிகளுடன் தொடர்புடைய அகவிலைப்படி மற்றும் கூடுதல் விகிதங்களை இணைத்து புதிய ஊதிய விகிதங்கள் கட்டமைக்கப்பட்டுள்ளன. இந்த புதிய ஊதிய தீர்வின்படி, அனைத்து பெண் ஊழியர்களும் மருத்துவச் சான்றிதழ் வழங்காமல் மாதத்திற்கு ஒரு நாள் மருத்துவ விடுப்பு எடுக்க அனுமதிக்கப்படுவார்கள்' என கூறப்பட்டு இருந்தது.

இந்த ஊதிய உயர்வு தொடர்பாக இந்திய வங்கிகள் சங்க தலைமை செயல் அதிகாரி சுனில் மேத்தா தனது எக்ஸ் தளத்தில், 'வங்கித்துறைக்கு இன்று (நேற்று) ஒரு வரலாற்று சிறப்புமிக்க தினம். ஏனெனில் 2022-ம் ஆண்டு நவம்பர் 1-ந் தேதி முதல் நடைமுறைக்கு வரும் வங்கி அலுவலர்கள் மற்றும் ஊழியர்களுக்கான ஊதிய திருத்தம் தொடர்பான 9-வது கூட்டுக் குறிப்பு மற்றும் 12-வது இருதரப்பு தீர்வில் வங்கி ஊழியர் சங்கங்கள் கையெழுத்திட்டுள்ளன' என குறிப்பிட்டு உள்ளார்.

2022 அக்டோபர் 31-ந் தேதி அல்லது அதற்கு முன்பு ஓய்வு பெற்றவர்களுக்கு ஓய்வூதியம் அல்லது குடும்ப ஓய்வூதியத்துடன் மாதாந்திர கருணைத் தொகையும் கூடுதலாக வழங்கப்படும் என்று ஒப்புக்கொள்ளப்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.

நாடாளுமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில் வங்கி ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு அறிவிக்கப்பட்டிருப்பது அவர்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

மேலும் செய்திகள்