போதைப்பொருள் விற்றதாக பிரபல கஞ்சா வியாபாரி உள்பட 17 பேர் கைது
|குஷால்நகரில் போதைப்பொருள் விற்றதாக பிரபல கஞ்சா வியாபாரி உள்பட 17 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீஸ் சூப்பிரண்டு ராமராஜன் தெரிவித்துள்ளார்.
குடகு:
குடகு மாவட்டம் குஷால்நகர் தாலுகாவில் கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருள் விற்பனை செய்ததாக 5 தனித்தனி வழக்குகளில் 17 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். விசாரணையில் அவர்கள் ஒரிசாவை சேர்ந்த சூர்யகாந்த் (37), ரபீக் (40), நயன் (40), அதிக் (34), அபிஷேக் (20), முகமது முகரம் (40), ஹக்கீம் (23), வினோத் (23), சங்கர் (45), சசிகுமார் (32), ஷெரீப் (31), வினிஷ் (28), அபிலாஷ் (27), நாகபூஷன் (52) உள்பட 17 பேர் என்பது தெரியவந்தது.
அவர்களிடம் இருந்து 13½ கிலோ கஞ்சா, 19½ கிராம் எம்.டி.எம்.ஏ. போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. இதில் சூரியகாந்த் முக்கிய குற்றவாளி ஆவார். இதுகுறித்து போலீஸ் சூப்பிரண்டு ராமராஜன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
குடகு மாவட்டம் குஷால்நகர் தாலுகாவில் குஷால்நகர் டவுன், குஷால்நகர் புறநகர், சுண்டிகொப்பா போலீஸ் நிலைய எல்லையில் கஞ்சா மற்றும் போதைப்பொருள் விற்றதாக 17 பர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைதானவர்களில் சூர்யகாந்த் என்பவர் தான் முக்கிய குற்றவாளி ஆவார். பிரபல கஞ்சா வியாபாரியான அவர், 'ேகாபி' சூரி என்று அழைக்கப்பட்டு வந்தார். ஒரிசாவை சேர்ந்த அவருக்கு 8 மொழிகள் தெரியும். பைலுகுப்பே பகுதியில் வசித்து வந்த அவர், ஆட்டோ ஓட்டி வந்துள்ளார்.
அவர் ஒடிசாவில் இருந்து ஐதராபாத் வழியாக குடகிற்கு கஞ்சா கடத்தி வந்து மாவட்டத்தில் உள்ள சிறிய வியாபாரிகளுக்கு சப்ளை செய்து வந்துள்ளார். சூரியகாந்த், குடகு மாவட்டம் மட்டுமின்றி மைசூரு, பிரியப்பட்டணா மற்றும் கேரள மாநிலத்தில் உள்ள வியாபாரிகளுக்கும் கஞ்சா சப்ளை செய்து வந்தார். இவரது பின்னணியில் உள்ள மேலும் பலரை தேடி வருகிறோம். கஞ்சா விற்ற அனைவரையும் கைது செய்வோம்.
இவ்வாறு அவர் கூறினார்.