இந்தியாவில் 3 ஆண்டுகளில் 17 லட்சம் மின்சார வாகனங்கள் பதிவு மத்திய அரசு தகவல்
|கடந்த 2020-ம் ஆண்டு முதல் இம்மாதம் 15-ந்தேதி வரை இந்தியாவில் 17 லட்சத்து 23 ஆயிரத்து 144 மின்சார வாகனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
புதுடெல்லி,
மத்திய கனரக தொழில்துறை இணை மந்திரி கிரிஷன் பால் குர்ஜால் மக்களவையில் கேள்வி ஒன்றுக்கு அளித்த எழுத்துப்பூர்வமான பதிலில் தெரிவித்துள்ளதாவது:-
கடந்த 2020-ம் ஆண்டு முதல் இம்மாதம் 15-ந்தேதி வரை இந்தியாவில் 17 லட்சத்து 23 ஆயிரத்து 144 மின்சார வாகனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 2020-ம் ஆண்டு மொத்தம் 1 லட்சத்து 23 ஆயிரத்து 92 வாகனங்களும், 2021-ம் ஆண்டு 3 லட்சத்து 27 ஆயிரத்து 976 மின்சார வாகனங்களும், 2022-ம் ஆண்டு 10 லட்சத்து 15 ஆயிரத்து 196 மின்சார வாகனங்களும் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த ஆண்டு இதுவரை 2 லட்சத்து 56 ஆயிரத்து 980 வாகனங்கள் பதிவுசெய்யப்பட்டு உள்ளன.
இவ்வாறு அதில் கூறியுள்ளார்.
மேலும் அந்த பதிலில், மின்சார வாகனங்களின் பயன்பாட்டை ஊக்குவிக்கும் வகையில், மத்திய கனரக தொழில்துறை சார்பில் மின்சார வாகன உற்பத்தியாளர்கள் மற்றும் நுகர்வோருக்கு 3 திட்டங்களின் கீழ் ஊக்கத்தொகை உள்ளிட்ட சலுகைகள் வழங்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.