< Back
தேசிய செய்திகள்
நேபாளத்தில் பயங்கர நிலச்சரிவு: பலியானோர் எண்ணிக்கை 17 ஆக உயர்வு
தேசிய செய்திகள்

நேபாளத்தில் பயங்கர நிலச்சரிவு: பலியானோர் எண்ணிக்கை 17 ஆக உயர்வு

தினத்தந்தி
|
17 Sep 2022 11:27 PM GMT

நேபாளத்தில் கனமழையால் ஏற்பட்ட பயங்கர நிலச்சரிவில் சிக்கி 17 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

காத்மாண்டு,

மலைப்பிரதேசமான நேபாளத்தில், ஜூன் முதல் செப்டம்பர் வரை பருவமழை காலமாகும். இந்த மழைக்காலத்தில் ஒவ்வொரு ஆண்டும் திடீர் வெள்ளம் மற்றும் நிலச்சரிவு போன்ற இயற்கை பேரிடர்கள் நிகழ்வது வழக்கமாக உள்ளது.

இந்த நிலையில் நேபாள நாட்டின் மேற்கு பகுதியில் உள்ள சுதுர்பாசிம் மாகாணத்தில் கடந்த சில தினங்களாக இடைவிடாது கனமழை கொட்டி வருகிறது.இதனால் அங்குள்ள பல்வேறு பகுதிகளில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் சுதுர்பாசிம் மாகாணத்தின் அச்சாம் மாவட்டத்தில் நேற்று முன்தினம் இரவு கொட்டித்தீர்த்த பேய் மழையால் அங்கு பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது.

இதில் ஏராளமான வீடுகள் மண்ணோடு மண்ணாக புதைந்தன. அந்த வீடுகளில் இருந்தவர்கள் பலர் உயிரோடு மண்ணில் புதைந்தனர்.

இதை தொடர்ந்து அங்கு உடனடியாக மீட்பு பணிகள் முடுக்கி விடப்பட்டன. தீயணைப்பு வீரர்கள், போலீசார் மற்றும் பேரிடர் மீட்பு குழுவினர் உள்ளிட்டோர் தீவிர மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

எனினும் 17 பேர் பிணமாகத்தான் மீட்கப்பட்டது. 11 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டனர். அவர்கள் ஹெலிகாப்டர்கள் மூலம் ஆஸ்பத்திரிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதோடு நிலச்சரிவில் சிக்கி 10 பேர் மாயமாகி உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் பலி எண்ணிக்கை மேலும் உயரலாம் என அஞ்சப்படுகிறது. எனினும் மாயமானவர்களை தேடும் பணியில் மீட்பு குழுவினர் முழு வீச்சில் ஈடுபட்டுள்ளனர்.

மேலும் செய்திகள்