வங்காள தேசம்: குளத்தில் பேருந்து கவிழ்ந்த விபத்தில் சிக்கி 17 பேர் பலி - 35 பேர் காயம்
|வங்காளதேச மாநிலம் சத்திரகாண்டா பகுதியில் குளத்தில் பேருந்து கவிழ்ந்ததில் 17 பேர் பலியாகினர். மேலும் 35 பேர் காயமடைந்தனர்.
டாக்கா,
பங்களாதேஷின் ஜலகதி சதர் உபாசிலாவின் சத்திரகாண்டா பகுதியில் உள்ள குளத்தில் பேருந்து கவிழ்ந்ததில் மூன்று குழந்தைகள் உட்பட குறைந்தது 17 பேர் கொல்லப்பட்டனர். மேலும் 35 பேர் காயமடைந்தனர் என்று தகவல் வெளியாகி உள்ளது, .
ஓட்டுநரின் கவனக்குறைவே விபத்துக்கு காரணம் என உயிர் பிழைத்தவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். மேலும் பேருந்தில் அளவுக்கு அதிகமாக பயணிகளை ஏற்றிச் சென்றது விபத்துக்கு காரணமாக இருக்கலாம் என்றும் அனைத்து பயணிகளும் பேருந்திற்குள் சிக்கிக்கொண்டனர். அதிக பாரம் ஏற்றப்பட்டதால், பேருந்து உடனடியாக நீரில் மூழ்கியது என்றும் அவர்கள் தெரிவித்தனர்.
60 பயணிகளை ஏற்றிக்கொண்டு பரிஷால் செல்லும் பேருந்து, பிரோஜ்பூரின் பண்டாரியாவில் இருந்து காலை 9:00 மணியளவில் புறப்பட்டு, 10:00 மணியளவில் பரிஷால்-குல்னா நெடுஞ்சாலையில் சத்ரகாண்டாவில் உள்ள சாலையோர குளத்தில் விழுந்தது.
மேலும் இந்த சம்பவத்தில் 17 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாகவும், மீதமுள்ள காயம் அடைந்தவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும் அரிஷால் பிரதேச ஆணையர் எம்டி ஷவ்கத் அலி தெரிவித்ததாக தகவல் வெளியாகி உள்ளது.
பலியானவர்களில் பெரும்பாலானோர் பிரோஜ்பூரின் பண்டாரியா உபாசிலா மற்றும் ஜல்கதியின் ராஜாபூர் பகுதியில் வசிப்பவர்கள் என்று போலீசார் தெரிவித்தனர்.