17 நாட்கள், 21 மசோதாக்கள்: பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் பாராளுமன்றம் நாளை கூடுகிறது...!
|பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நாளை கூடுகிறது.
புதுடெல்லி:
2023-ம் ஆண்டுக்கான பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த ஜனவரி 31-ந் தேதி தொடங்கியது. ஜனாதிபதி திரவுபதி முர்மு உரை நிகழ்த்தி அவையை தொடங்கி வைத்தார்.
அதன் பிறகு மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் பட்ஜெட்டை தாக்கல் செய்தார். பாராளுமன்ற கூட்டத் தொடரின் முதல் அமர்வு பிப்ரவரி 13-ந் தேதி வரை நடைபெற்றது.
2-வது அமர்வு மார்ச் 13-ந் தேதி முதல் ஏப்ரல் 6-ந் தேதி வரை நடைபெற்றது. அதானி விவகாரத்தால் பாராளுமன்றத்தின் இரு அவைகளையும் எதிர்க்கட்சிகள் முடக்கி இருந்தன.
இந்த நிலையில் பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் பாராளுமன்றம் மழைக்கால கூட்டத்தொடர் நாளை (வியாழக்கிழமை) கூடுகிறது. மழைக்கால கூட்டத்தொடர் 20-ந் தேதி முதல் ஆகஸ்ட் 11-ந் தேதி வரை நடைபெறுகிறது.
இந்த கூட்டத்தொடரில் பல்வேறு பிரச்சினைகளை கிளப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன. குறிப்பாக மணிப்பூர் கலவரம் விவகாரம் பாராளுமன்றத்தில் புயலை கிளப்பும் என்று கருதப்படுகிறது. பாராளுமன்றத்தில் மணிப்பூர் கலவர பிரச்சினையை எதிர்க்கட்சிகள் ஆக்ரோஷத்துடன் எழுப்பும்.
மேலும் விலைவாசி உயர்வு, விசாரணை அமைப்புகளை பயன்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களையும் எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன.
பாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதாவை வீழ்த்த 26 எதிர்க்கட்சிகள் ஒன்று பட்டுள்ளன. இந்த கட்சிகள் அனைத்தும் ஒன்று சேர்ந்து பாராளுமன்றத்தில் பா.ஜனதாவுக்கு நெருக்கடி கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
புதிய பாராளுமன்ற கூட்டத்தில் நடைபெறும் இந்த கூட்டத் தொடர் 15 அமர்வுகள் கொண்டு இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 15 நாட்களில் 21 புதிய மசோதாக்களை தாக்கல் செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளன.
மேலும் 7 பழைய மசோதாக்கள் விவாதத்துக்கு பட்டியலிடப்பட்டுள்ளன. டிஜிட்டல் தனிநபர் தரவு மசோதா, வன (பாதுகாப்பு) திருத்த மசோதா, பல மாநில கூட்டுறவு சங்கங்கள் திருத்த மசோதா, தேசிய ஆராய்ச்சி அறக்கட்டளை மசோதா உள்ளிட்ட மசோதாக்கள் தாக்கல் ஆகும் என்று கருதப்படுகிறது.
பாராளுமன்றம் சுமூகமாக நடைபெறுவதற்காக பாராளுமன்றம் கூடுவதற்கு முந்தைய தினம் அனைத்து கட்சி கூட்டம் நடைபெறும். அதன்படி மத்திய அரசு இன்று அனைத்து கட்சி கூட்டத்துக்கு அழைப்பு விடுத்தது. அதன்படி அனைத்துக் கட்சி கூட்டம் இன்று நடக்கிறது.