காவிரி மேலாண்மை ஆணையத்தின் 16-வது கூட்டம் நிறைவு; மேகதாது விவகாரம் குறித்து விவாதிக்கப்படவில்லை
|சுப்ரீம் கோர்ட் உத்தரவு காரணமாக மேகதாது விவகாரம் குறித்து காவிரி மேலாண்மை ஆணையத்தின் ஆலோசனைக் கூட்டத்தில் விவாதிக்கப்படவில்லை.
புதுடெல்லி,
காவிரி மேலாண்மை ஆணையத்தின் 16-வது கூட்டம் டெல்லியில் உள்ள மத்திய நீர்வள ஆணைய அலுவலகத்தில் காவிரி மேலாண்மை ஆணைய தலைவர் எஸ்.கே.ஹல்தார் தலைமையில் இன்று நடைபெற்றது. இதில் தமிழகம் சார்பில், நீர் வளத்துறை செயலர் சந்தீப் சக்சேனா, காவிரி தொழில்நுட்ப பிரிவு தலைவர் சுப்பிரமணியன், தமிழக அரசு வழக்கறிஞர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
அதே சமயம் கர்நாடகத்தின் சார்பில் கூடுதல் தலைமை செயலாளர் ராகேஷ் சிங் நேரடியாகவும், கேரள மற்றும் புதுச்சேரியைச் சேர்ந்த பிரதிநிதிகள் காணொலி வாயிலாகவும் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் முதலாவதாக நான்கு மாநில பிரதிநிதிகளும் நீர் வழங்கல் உள்ளிட்ட புள்ளி விவரங்களை எழுத்துப்பூர்வமாக தாக்கல் செய்தனர்.
தமிழக அரசு சார்பில் கலந்து கொண்ட அதிகாரிகள், காவிரியில் இருந்து ஒவ்வொரு மாதமும் வழங்க வேண்டிய நீரை கர்நாடக அரசு முறையாக வழங்க வேண்டும் என்று வலியுறுத்தினர். மேலும் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளின் மழைப்பொழிவு அளவு, தண்ணீட் வரத்து ஆகியவை குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது.
இந்த நிலையில் சுப்ரீம் கோர்ட்டில் காவிரி தொடர்பாக தமிழ்நாடு மற்றும் கர்நாடக அரசுகள் தொடர்ந்து வழக்கு நிலுவையில் உள்ளதால், மேகதாது அணை விவகாரம் குறித்து இன்றைய கூட்டத்தில் விவாதிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.