வெறித்தனத்தின் உச்சம்.. கொலை செய்துவிட்டு சடலத்தின் மீது டான்ஸ் ஆடிய கொலையாளி
|வாலிபரிடம் இருந்த பணத்தை திருடும்போது தடுத்ததே கொலைக்கான காரணம் என்று கூறப்படுகிறது.
புதுடெல்லி,
வடகிழக்கு டெல்லியின் வெல்கம் பகுதியில் உள்ள ஜந்தா மஸ்தூர் காலனியில் நேற்று முன்தினம் இரவில் நடந்த கொடூர கொலை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 16 வயதுடைய சிறுவன் ஒருவன், சுமார் 350 ரூபாய்க்காக 18 வயது வாலிபரை கொடூரமாக கத்தியால் குத்திக் கொன்றுள்ளான்.
இதுபற்றி துணை கமிஷனர் ஜாய் டிர்கி கூறியதாவது,
நேற்று முன்தினம் இரவு சுமார் 11.15 மணியளவில் 18 வயதுடைய வாலிபர் ஒருவர் வெல்கம் பகுதியில் உள்ள ஜந்தா மஸ்தூர் காலனியில் இறந்து இருப்பதாக எங்களுக்கு தகவல் வந்தது. இதையடுத்து அங்கு சென்ற போலீசார், ரத்த வெள்ளத்தில் கிடந்த வாலிபரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
இந்த சம்பவம் பற்றி வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்படுகிறது. சம்பவம் நடந்த பகுதியில் இருந்த சிசிடிவி கேமராவின் பதிவுகள் கிடைத்துள்ளன.
சிசிடிவி காட்சிகளில், 18 வயதுடைய வாலிபரை குற்றவாளி கத்தியால் குத்தி இழுத்து வரும் காட்சிகள் பதிவாகியிருந்தன. மேலும் அந்த வாலிபர் இறந்ததை உறுதி செய்ய அவரது கழுத்தில் குற்றாவளி பலமுறை குத்தியதுடன், ஒருகட்டத்தில் சடலத்தின் மீது நடனம் ஆடியுள்ளான். கிட்டத்தட்ட 60 முறை கத்தியால் குத்தியிருக்கலாம்.
அவர்கள் இருவருக்கும் எந்த ஒரு தொடர்பும் இல்லை என்று தெரிகிறது. வாலிபரிடம் இருந்த பணத்தை திருடும்போது தடுத்ததே கொலைக்கான காரணம் என்று கூறப்படுகிறது.
குற்றவாளி கைது செய்யப்பட்டுள்ளான். அவனிடம் கொலைக்கான காரணம் பற்றி விசாரணை நடத்தப்படுகிறது.
சிசிடிவி காட்சிகள் ஆய்வு செய்யப்பட்டன. தடயவியல் குழுவினரும் சம்பவ இடத்தை பார்வையிட்டு சோதனை மேற்கொண்டு தடயங்களை சேகரித்தனர்.
இவ்வாறு அவர் கூறினார்.