காருக்கு தீவைத்த வழக்கில் ஸ்ரீராமசேனை அமைப்பினர் 16 பேர் கைது
|பெங்களூரு அருகே காருக்கு தீவைத்த வழக்கில் ஸ்ரீராமசோனை அமைப்பை சேர்ந்த 16 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் மாட்டிறைச்சி கடத்திய 7 பேர் கும்பலும் போலீசாரிடம் சிக்கி உள்ளனர்.
தொட்டப்பள்ளாப்புரா:
பெங்களூரு அருகே காருக்கு தீவைத்த வழக்கில் ஸ்ரீராமசோனை அமைப்பை சேர்ந்த 16 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் மாட்டிறைச்சி கடத்திய 7 பேர் கும்பலும் போலீசாரிடம் சிக்கி உள்ளனர்.
15 டன் மாட்டிறைச்சி பறிமுதல்
பெங்களூரு புறநகர் மாவட்டம் தொட்டபள்ளாப்புரா டவுனில் நேற்று முன்தினம் ஆந்திர மாநிலத்தில் இருந்து மாட்டிறைச்சி கடத்தி வந்த வாகனங்களை ஸ்ரீராமசேனை அமைப்பினர் தடுத்து நிறுத்தி இருந்தார்கள். அத்துடன் மாட்டிறைச்சி கடத்தியதாக ஒரு காரையும் அந்த அமைப்பினர் தீவைத்து எரித்தனர். இந்த சம்பவம் தொட்டபள்ளாப்புராவில் பரபரப்பையும், பதற்றத்தையும் ஏற்படுத்தி இருந்தது.
இதுகுறித்து தொட்டபள்ளாப்புரா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். இந்த நிலையில், ஆந்திர மாநிலத்தில் இருந்து 5 சரக்கு வாகனங்களில் ஒட்டு மொத்தமாக 15 டன் மாட்டிறைச்சியை பெங்களூரு மற்றும் பெங்களூரு புறநகர் பகுதிகளில் விற்பனை செய்வதற்காக கடத்தி வந்தது தெரியவந்துள்ளது.
16 பேர் கைது
இதையடுத்து, 15 டன் மாட்டிறைச்சியும் பறிமுதல் செய்யப்பட்டு இருப்பதாகவும், அவற்றை கடத்துவதற்கு பயன்படுத்திய வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது. அத்துடன் மாட்டிறைச்சி கடத்தியதாக 7 பேரை தொட்டபள்ளாப்புரா டவுன் போலீசார் கைது செய்துள்ளனர். அதே நேரத்தில் மாட்டிறைச்சி கடத்தி வந்தவர்கள் மீது தாக்குதல் நடத்தியதாகவும், காருக்கு தீவைத்ததாகவும் ஸ்ரீராமசேனை அமைப்பை சேர்ந்த 16 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர் என்று பெங்களூரு புறநகர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மல்லிகார்ஜுன் தெரிவித்துள்ளார். இந்த வழக்கில் மேலும் சிலரை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும், தற்போது தொட்டபள்ளாப்புரா டவுனில் அமைதி திரும்பி இருப்பதாகவும், அவர் தெரிவித்தார்.