< Back
தேசிய செய்திகள்
151 எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மீது பெண்களுக்கு எதிரான குற்றங்களில் வழக்குப்பதிவு
தேசிய செய்திகள்

151 எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மீது பெண்களுக்கு எதிரான குற்றங்களில் வழக்குப்பதிவு

தினத்தந்தி
|
21 Aug 2024 6:54 PM IST

16 எம்.பி.க்கள் மற்றும் 135 எம்.எல்.ஏ.க்கள் மீது பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பாக வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

புதுடெல்லி,

இந்தியாவில் தற்போது பதவியில் இருக்கும் எம்.பி.க்களும், எம்.எல்.ஏ.க்களும் கடந்த 2019 முதல் 2024 வரை நடைபெற்ற தேர்தல்களில், தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பித்த வேட்புமனுக்களை 'ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான சங்கம்' ஆய்வு செய்து அறிக்கை வெளியிட்டுள்ளது.

இந்த அறிக்கையில், 16 எம்.பி.க்கள் மற்றும் 135 எம்.எல்.ஏ.க்கள் மீது பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பாக வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் அதிகபட்சமாக மேற்கு வங்காளத்தில் 25 எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்களுக்கு எதிராக வழக்குகள் பதிவாகியுள்ளன.

அதைத் தொடர்ந்து ஆந்திராவைச் சேர்ந்த 21 எம்.பி.க்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் மீதும், ஒடிசாவைச் சேர்ந்த 17 எம்.பி.க்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் மீதும் பெண்களுக்கு எதிரான குற்றங்களில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் அந்த அறிக்கையில் 2 எம்.பி.க்கள் மற்றும் 14 எம்.எல்.ஏ.க்கள் மீது இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 376-ன் கீழ் பாலியல் வன்கொடுமை வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், இந்த குற்றங்கள் உறுதி செய்யப்பட்டால் அவர்களுக்கு 10 ஆண்டுகள் சிறை அல்லது வாழ்நாள் சிறை தண்டனை விதிக்கப்படலாம் எனவும் கூறப்பட்டுள்ளது.

அதே சமயம் கட்சி வாரியாக, பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பாக அதிகபட்சமாக பா.ஜ.க.வைச் சேர்ந்த 54 எம்.பி.க்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அதை தொடர்ந்து காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 23 எம்.பி.க்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் மீதும், தெலுங்கு தேசம் கட்சியைச் சேர்ந்த 17 எம்.பி.க்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் மீதும் பெண்களுக்கு எதிரான குற்றங்களில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்