15 வயது அனாதை சிறுமி கத்தி முனையில் பலாத்காரம்; 8 பேர் கொண்ட கும்பல் அட்டூழியம்
|தெலுங்கானாவில் 15 வயது அனாதை சிறுமியை வீடு புகுந்து, கத்தி முனையில் பாலியல் பலாத்காரம் செய்த 8 பேர் கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.
ஐதராபாத்,
தெலுங்கானாவின் தெற்கு ஐதராபாத் நகரில் லால் பஜார் பகுதியில் பெற்றோருடன் 15 வயது சிறுமி மற்றும் 14 வயது இளைய சகோதரர் வசித்து வந்தனர். இந்நிலையில், சில வாரங்களுக்கு முன் பெற்றோர் இருவரும் உயிரிழந்ததும் அவர்கள் அனாதைகளானார்கள்.
இதன்பின்னர், அவர்களுடைய உறவினர் ஒருவர், மீர்பேட்டையில் உள்ள தனது வீட்டுக்கு இருவரையும் அழைத்து சென்றார். சிறுமி தில்சுக்நகரில் துணிக்கடை ஒன்றில் விற்பனையாளராக பணியாற்றி வந்துள்ளார்.
சிறுவன் பிளெக்ஸ் போர்டு கடையில் வேலை செய்து வந்துள்ளான். இந்நிலையில், இவர்கள் இருவரும் பக்கத்து வீடுகளை சேர்ந்த 3 பேருடன் தங்களுடைய வீட்டில் இருந்தபோது, நேற்று காலை 8 பேர் கொண்ட மர்ம கும்பல் ஒன்று புகுந்துள்ளது.
அவர்களில் 3 பேர் சிறுமியை மாடிக்கு அழைத்து சென்றனர். மற்றவர்கள் சிறுமியின் சகோதரன் மற்றும் பிற சிறுவர்களை கத்தி முனையில் மிரட்டியுள்ளனர். சிறுமியை 3 பேர் பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.
இந்த சம்பவம் பற்றி அறிந்ததும், காங்கிரஸ் தொண்டர்கள் உள்பட அந்த பகுதி மக்கள் மீர்பேட் மேயர் தலைமையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அவர்களை போலீசார் கைது செய்து ஆம்பர்பேட் காவல் நிலையத்தில் வைத்தனர். சட்டம் ஒழுங்கை பாதுகாக்க அதிக அளவில் போலீசார் குவிக்கப்பட்டனர். இந்த பலாத்கார சம்பவம் பற்றி சிறுமியின் சகோதரர் மீர்பேட்டை போலீசில் புகார் அளித்துள்ளார். சிறுமி மருத்துவ பரிசோதனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
சி.சி.டி.வி. கேமராக்களின் உதவியுடன் குற்றவாளிகளை தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டு உள்ளனர். 4 பேர் கைது செய்யப்பட்டனர். மற்றவர்களை தேடி வருகின்றனர். அவர்களில் ஒருவர் தரை தளத்தில் வசித்துள்ளார். மற்ற 2 பேர் பக்கத்தில் வசித்து வந்துள்ளனர்.