சொந்த குடும்பத்தினர் 4 பேரை படுகொலை செய்த 15 வயது சிறுவன்; திரிபுராவில் சம்பவம்
|திரிபுராவில் சொந்த குடும்பத்தினர் 4 பேரை 15 வயது சிறுவன் படுகொலை செய்த அதிர்ச்சி சம்பவம் தெரிய வந்துள்ளது.
தலாய்,
திரிபுராவின் தலாய் மாவட்டத்தில் துரை ஷிப் பாரி கிராமத்தில் கமல்பூர் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் வீடு ஒன்றிற்கு வெளியே இருந்த குழியில் உடல் ஒன்று கிடந்து உள்ளது. இதுபற்றி போலீசாருக்கு தகவல் கிடைத்ததும் அவர்கள் சம்பவ பகுதிக்கு சென்று அந்த உடலை கைப்பற்றினர்.
இதுபற்றி கமல்பூர் காவல் அதிகாரி ரமேஷ் யாதவ் கூறும்போது, வீட்டிற்கு வெளியே இருந்த அந்த குழியை சந்தேகத்தின்பேரில் தோண்டியபோது 3 உடல்கள் கிடைத்து உள்ளன. மொத்தமுள்ள 4 உடல்களில் 3 பேர் பெண்கள். ஒருவர் ஆண்.
அவர்கள் அனைவரும் ஒரே குடும்ப உறுப்பினர்கள். இந்த சம்பவம் பற்றி விசாரணை நடத்தியதில் அதே குடும்பத்தில் உள்ள 15 வயது சிறுவன் படுகொலைகளை செய்த விவரம் தெரிய வந்துள்ளது. சிறுவனை கைது செய்து விசாரித்து வருகிறோம் என கூறியுள்ளார்.
இந்த சம்பவத்தில் உயிரிழந்தவர்கள் பாதல் தேப்நாத் (வயது 70), சுமிதா தேப்நாத் (வயது 32), சுபர்னா தேப்நாத் (வயது 10) மற்றும் ரேகா தேப் (வயது 42) என அடையாளம் காணப்பட்டு உள்ளனர். படுகொலைக்கான காரணம் பற்றி உடனடியாக தெரியவில்லை. போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.