< Back
தேசிய செய்திகள்
7 இந்திய கலைப்பொருட்களை திருப்பி தரும் ஸ்காட்லாந்து- மத்திய மந்திரி கிஷன் ரெட்டி
தேசிய செய்திகள்

7 இந்திய கலைப்பொருட்களை திருப்பி தரும் ஸ்காட்லாந்து- மத்திய மந்திரி கிஷன் ரெட்டி

தினத்தந்தி
|
20 Aug 2022 11:32 PM IST

14-ம் நூற்றாண்டின் இந்தோ-பாரசீக வாள் உள்பட 7 கலைப்பொருட்கள் ஸ்காட்லாந்தில் இருந்து திருப்பி அனுப்பப்படுகின்றன என மத்திய மந்திரி கிஷன் ரெட்டி தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் கலாசாரத்தை பிரதிபலிக்கும் பல்வேறு கலை பொருட்கள் ஸ்காட்லாந்தில் உள்ள அருங்காட்சியகங்களில் இருப்பது ஏற்கனவே கண்டுபிடிக்கப்பட்டது. அதை தொடர்ந்து அந்த கலை பொருட்களை மீட்டு கொண்டு வருவதற்கான முயற்சிகளில் மத்திய அரசு இறங்கியது. இது தொடர்பாக இந்திய மற்றும் ஸ்காட்லாந்து அதிகாரிகள் இடையே பல மாதங்களாக பேச்சுவார்த்தை நடந்து வந்தது.

இதில் ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் உள்ள கெல்விங்ரோவ் அருங்காட்சியகத்தில் இருக்கும் 14-ம் நூற்றாண்டின் இந்தோ-பாரசீக வாள், 10-ம் நூற்றாண்டை சேர்ந்த சூரிய கடவுளின் கற்சிலை, உத்தரபிரதேசத்தின் கான்பூர் நகரில் உள்ள கோவிலில் இருந்து திருடப்பட்ட கல்லால் செய்யப்பட்ட கதவு சட்டம் உள்ளிட்ட 7 கலை பொருட்களை திருப்பி தர ஸ்காட்லாந்து அதிகாரிகள் இந்த ஆண்டு தொடக்கத்தில் ஒப்புக்கொண்டனர்.

இந்த நிலையில் 7 இந்திய கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைப்பது தொடர்பான இறுதி ஒப்பந்தத்தில் ஸ்காட்லாந்து அருங்காட்சியகம் நேற்று கையெழுத்திட்டதாக மத்திய சுற்றுலா மற்றும் கலாசாரத்துறை மந்திரி கிஷன் ரெட்டி தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்ட டுவிட்டர் பதிவில், "நரேந்திர மோடி அரசாங்கத்தின் கீழ் இந்தியாவின் உண்மையான கலைப்பொருட்கள் திரும்பப் பெறுவது தொடர்கிறது. அதன் ஒரு பகுதியாக 14-ம் நூற்றாண்டின் இந்தோ-பாரசீக வாள் உள்பட 7 கலைப்பொருட்கள் ஸ்காட்லாந்தில் இருந்து திருப்பி அனுப்பப்படுகின்றன. கெல்விங்ரோவ் அருங்காட்சியகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இங்கிலாந்துக்கான இந்திய துணை தூதர் சுஜித் கோஷ் முன்னிலையில் இது தொடர்பாக இறுதி ஒப்பந்தம் கையெழுத்தானது" என குறிப்பிட்டுள்ளார்.

மேலும் செய்திகள்