17-வது மக்களவையில் இதுவரை 149 மசோதாக்கள் நிறைவேற்றம் - சபாநாயகர் ஓம் பிர்லா
|17-வது மக்களவையில் இதுவரை 149 மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டுள்ளதாக சபாநாயகர் ஓம் பிர்லா பெருமையுடன் குறிப்பிட்டார்.
3 ஆண்டுகள் நிறைவு
நாடாளுமன்றத்தின் தற்போதைய மக்களவை 17-வது மக்களவை ஆகும். இது கடந்த 2019-ம் ஆண்டு மே மாதம் 25-ந் தேதி அமைக்கப்பட்டது.இதன் முதல் அமர்வு 2019-ம் ஆண்டு ஜூன் 17-ந்தேதி தொடங்கியது. தற்போது 3 ஆண்டுகள் பூர்த்தி ஆகி இருக்கிறது. மொத்தம் 8 கூட்டத்தொடர்கள் முடிந்துள்ளன.
இந்த 3 ஆண்டுகளின் செயல்பாடுகள் பற்றி சபாநாயகர் ஓம் பிர்லா நிருபர்களிடம் கூறியதாவது:-
சிறந்த முறையில்...
கடந்த 14 முதல் 16 வரையிலான 3 மக்களவையின் ஒன்றுமுதல் 8 வரையிலான கூட்டத்தொடர்களுடன் ஒப்பிடுகையில் 17-வது மக்களவையின் முதல் 8 கூட்டத்தொடர்கள் சிறந்த முறையில் செயல்பட்டது.
17-வது மக்களவை இதுவரை, மொத்தம் 995.45 மணிநேரம் பணியாற்றி உள்ளது. இது மிக அதிகமான நேரம் ஆகும். நிர்ணயிக்கப்பட்ட நேரத்தையும் தாண்டி, பின்னிரவு வரைக்கும் அவை செயல்பட்டு உள்ளது.
149 மசோதாக்கள்
இதில் அதிக அளவிலான மசோதாக்கள் அதாவது இதுவரை 149 மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டு உள்ளன. அதைப்போல உறுப்பினர்கள் பங்கேற்பும், விவாதமும் அதிகரித்துள்ளது. விதி எண் 377-ன் கீழ் இந்த மக்களவையில் இதுவரை 3 ஆயிரத்து 39 விஷயங்கள் எழுப்பப்பட்டு உள்ளன. நேரமில்லா நேரத்தில் 4,648 விஷயங்கள் கேட்கப்பட்டு உள்ளன.
குறுகிய கால விவாதங்களுக்கு 17-வது மக்களவையில் 6 மணி 5 நிமிடங்கள் எடுத்துக்கொள்ளப்பட்டு உள்ளன. இது முந்தைய 3 அவைகளில் அதிகபட்சமாக 4.43 மணிநேரமே இருந்தது.
நிதி சேமிப்பை பொறுத்தவரை புத்தாக்க முயற்சிகள் மற்றும் டிஜிட்டல் தொழில்நுட்ப பயன்பாடு காரணமாக ரூ.668 கோடியே 86 லட்சம் மிச்சம் பிடிக்கப்பட்டு உள்ளது.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
புதிய கட்டிடம்
மேலும், புதிய நாடாளுமன்ற கட்டிட பணிகளை பற்றி ஓம் பிர்லா சொல்லும்போது, "நிர்ணயிக்கப்பட்ட காலத்தைவிட கட்டிட பணி ஒருவாரம் மட்டுமே பின்தங்கியிருக்கிறது. அதுவும் விரைவில் சரி செய்யப்படும். கட்டிடத்தின் கூம்பு கட்டுமான பணி, 10, 15 நாட்களில் முடிந்துவிடும். முழு பணியும் முடிந்து வருகிற அக்டோபர் மாதம் 30-ந் தேதி கட்டிடம் ஒப்படைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அப்படி ஒப்படைக்கப்பட்டால் இந்த ஆண்டின் குளிர்கால கூட்டத்தொடர் புதிய கட்டிடத்தில் நடைபெறும்" என்று கூறினார்.17-வது மக்களவையில் இதுவரை 149 மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டுள்ளதாக சபாநாயகர் ஓம் பிர்லா பெருமையுடன் குறிப்பிட்டார்.