சிவமொக்காவில் அமைதி திரும்பியதை தொடர்ந்து 144 தடை உத்தரவு வாபஸ்
|சிவமொக்காவில் அமைதி திரும்பியதை தொடர்ந்து நேற்று 144 தடை உத்தரவு வாபஸ் பெறப்பட்டது. இதையடுத்து அங்கு வழக்கம்போல கடைகள் செயல்பட தொடங்கின.
சிவமொக்கா:
சிவமொக்காவில் அமைதி திரும்பியதை தொடர்ந்து நேற்று 144 தடை உத்தரவு வாபஸ் பெறப்பட்டது. இதையடுத்து அங்கு வழக்கம்போல கடைகள் செயல்பட தொடங்கின.
சிவமொக்கா கலவரம்
சிவமொக்கா மாவட்டத்தில் கடந்த 1-ந் தேதி மீலாது நபி பண்டிகை கொண்டாடப்பட்டது. இந்த பண்டிகையையொட்டி சிவமொக்கா டவுன் ராகிகுட்டா பகுதியில் திப்பு சுல்தான் பேனர் வைக்கப்பட்டிருந்தது. அந்த பேனரில் சர்ச்சைக்குரிய வாசகம் இடம் பெற்றிருந்தது. அந்த வாசகத்தால் இரு தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்படும் சூழ்நிலை உருவானது. இதையடுத்து போலீசார் தலையிட்டு அதை அழிக்கும்படி செய்தனர். பின்னர் அன்றைய தினம் மாலை மீலாது நபி ஊர்வலம் நடந்தது. அப்போது ஊர்வலத்தில் கலந்து கொண்ட சிலர், அங்கிருந்த வீடுகள் மற்றும் வாகனங்கள் மீது கல்வீசி தாக்குதல் நடத்தினர்.
இதனால் அங்கு இரு தரப்பினரிடையே பயங்கர கலவரம் ஏற்பட்டது. இந்த கலவரத்தை தடுக்க போலீசார் தடியடி நடத்தினர். இதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர். இந்த கலவரத்தில் போலீசார் உள்பட 7 பேர் படுகாயம் அடைந்தனர். 60-க்கும் அதிகமானவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அமைதி திரும்பியது
இந்த கலவரத்தை தொடர்ந்து ராகிகுட்டா உள்பட நகர் முழுவதும் 144 தடை உத்தரவு போடப்பட்டது. போலீசார் தொடர்ந்து ரோந்து பணியிலும் கண்காணிப்பு பணியிலும் ஈடுபட்டு வந்தனர்.
இந்தநிலையில், நேற்று சிவமொக்காவில் அமைதி திரும்பியது. இதனை உறுதி செய்த மாவட்ட கலெக்டர் செல்வமணி, அந்த 144 தடை உத்தரவை திரும்ப பெற்றார்.
இதையடுத்து கலவரம் நடந்த ராகிகுட்டா உள்பட சாந்திநகர், காந்தி பஜார், நேருநகர் ஆகிய இடங்களில் வழக்கம்போல கடைகள் செயல்பட தொடங்கின. இருப்பினும் போலீசார் தொடர்ந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். ராகிகுட்டாவிற்குள் நுழைபவர்களை தீவிர சோதனைக்கு பின்னரே போலீசார் அனுமதித்து வருகின்றனர். இதனால் பொதுமக்கள் அச்சமடைய தேவையில்லை என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.
144 தடை உத்தரவு வாபஸ்
இதுகுறித்து மாநில போலீஸ் டி.ஜி.பி அலோக் மோகன் கூறியதாவது:-
சிவமொக்கா கலவரம் தொடர்பாக இதுவரை 27 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளது. 60-க்கும் அதிகமானவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கலவரம் நடந்த இடத்தில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளின் அடிப்படையில் மேலும் சிலரை தேடி வருகிறோம்.
தற்போது சிவமொக்காவில் அமைதி திரும்பி இருப்பதால் 144 தடை உத்தரவு வாபஸ் பெறப்பட்டுள்ளது. கடைகள் அனைத்தும் வழக்கம்போல செயல்பட்டு வருகிறது. ராகிகுட்டாவில் அமைதி திரும்பினாலும், போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த பகுதிக்குள் யார் புதிதாக நுழைந்தாலும் தீவிர சோதனைக்கு பின்னரே அனுமதி வழங்கப்படுகிறது.
இதேபோல சமூக வலைத்தளத்தில் வதந்தி பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். பொதுமக்கள் இந்த வதந்திகளை நம்ப வேண்டாம். சாகர் நகரில் மீலாது நபி ஊர்வலத்தின் போது கத்தியை பயன்படுத்தியதாக கூறப்பட்டது. அது பிளாஸ்டிக் கத்தி. இதனை போலீசார் உறுதி செய்துள்ளனர். எனவே வதந்திகளை பொதுமக்கள் நம்ப கூடாது.
இவ்வாறு அவர் கூறினார்.