< Back
தேசிய செய்திகள்
உத்தர பிரதேசம்: தஸ்னா சிறையில் 140 கைதிகளுக்கு எச்.ஐ.வி தொற்று
தேசிய செய்திகள்

உத்தர பிரதேசம்: தஸ்னா சிறையில் 140 கைதிகளுக்கு எச்.ஐ.வி தொற்று

தினத்தந்தி
|
18 Nov 2022 9:10 PM IST

உத்தர பிரதேச மாநிலம் காசியாபாத் மாவட்டத்தில் உள்ள தஸ்னா மாவட்ட சிறையில் 140 கைதிகளுக்கு எச்.ஐ.வி தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

காசியாபாத்,

உத்தர பிரதேச மாநிலம் காசியாபாத் மாவட்டத்தில் உள்ள தஸ்னா மாவட்ட சிறையில் 140 கைதிகளுக்கு எச்.ஐ.வி தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக சிறையின் மூத்த அதிகாரி தெரிவித்துள்ளார்.

காசியாபாத் சிறையில் உள்ள கைதிகளை எம்எம்ஜி மாவட்ட அரசு மருத்துவமனையில் உள்ள ஆன்டிரெட்ரோவைரல் தெரபி மையத்தின் மருத்துவர்கள் பரிசோதித்து வருவதாக மாவட்ட சிறை கண்காணிப்பாளர் அலோக் குமார் சிங் தெரிவித்தார்.

கடந்த 2016-ம் ஆண்டில், மாநில எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கம் சிறைகளில் எச்.ஐ.வி பரிசோதனை முகாம்களை ஏற்பாடு செய்தது. அப்போது காசியாபாத் சிறையில் 49 கைதிகளுக்கு எச்.ஐ.வி பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது.

அதன்பிறகு அரசு, எச்.ஐ.வி மற்றும் காசநோய் பரிசோதனைகளை பொது சுகாதாரப் பரிசோதனையின் ஒரு பகுதியாக்கி, புதிய கைதிகள் அனைவருக்கும் கட்டாயம் எச்.ஐ.வி மற்றும் காசநோய் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று உத்தரவிட்டது.

ஒரு கைதிக்கு எச்.ஐ.வி இருப்பது கண்டறியப்பட்டால், அவருக்கு சிறைக்குள் அமைந்துள்ள ஒருங்கிணைந்த ஆலோசனை மற்றும் சிகிச்சை மையத்தில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. தற்போது காசியாபாத் சிறையில் 5,500 கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 140 பேருக்கு எச்.ஐ.வி தொற்று மற்றும் 35 பேருக்கு காசநோய் உள்ளது கண்டறியப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்