தேர்வுத் தாள் கசிவு விவகாரம்: மோசடியாக பணியில் சேர்ந்த 14 பயிற்சி சப்-இன்ஸ்பெக்டர்கள் கைது
|ராஜஸ்தானில் சப்-இன்ஸ்பெக்டர் தேர்வுக்கான வினாத்தாள் கசிந்த விவகாரத்தில் 14 பேர் கைது செய்யப்பட்டனர்.
ஜெய்ப்பூர்,
2021-ம் ஆண்டு ராஜஸ்தானில் காவல்துறையில் சப்-இன்ஸ்பெக்டர் மற்றும் பிளட்டூன் கமாண்டர் பணிகளுக்கான எழுத்துத் தேர்வு நடந்தது. அப்போது தேர்வுத்தாள் கசிந்ததாக பரபரப்பு ஏற்பட்டது. தேர்வு மைய கண்காணிப்பாளர் ராஜேஷ் கண்டேல்வால் முறைகேட்டில் சம்பந்தப்பட்டதற்காக கைது செய்யப்படடார்.
இதுகுறித்து விசாரிக்க சிறப்பு செயல்பாட்டு குழு அமைக்கப்பட்டது. தேர்வுத்தாள் கசிவு குறித்து 40 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. 16 பயிற்சி சப்-இன்ஸ்பெக்டர்கள் கைது செய்யப்பட்டனர்.
இந்த சிறப்பு குழுவில் இடம்பெற்றுள்ள அமைச்சர் கிரோடி லால் மீனா இந்த வழக்கு குறித்து நேற்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், "இந்த மோசடியால் சப்-இன்ஸ்பெக்டர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 250-300 பேர் வரை இருக்கலாம். இவர்கள் கண்டுபிடித்து நீக்கப்படுவார்கள். அவர்களுக்குப் பதிலாக புதியவர்கள் நியமிக்கப்படுவார்கள். தேர்வை ரத்து செய்ய அரசுடன் பேசுவேன்.
ராஜஸ்தான் அரசுப் பணிகள் தேர்வு ஆணையத்தில் உள்ள சில அதிகாரிகள் தேர்வுத்தாள் கசிவு விவகாரத்தில் ஈடுபட்டு இருப்பதற்கான ஆதாரங்கள் உள்ளன. முந்தைய காங்கிரஸ் அரசாங்கம் 50 சதவீத போலி நபர்களை வேலைக்கு சேர்த்தது. தற்போது இந்த வழக்கில் பயிற்சி சப்-இன்ஸ்பெக்டர்கள் 14 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்" என்று அமைச்சர் கிரோடி லால் மீனா கூறினார்.