< Back
தேசிய செய்திகள்
மடிகேரியில்  தொழிலாளி கடத்தல் வழக்கில் 14 பேர் கைது
தேசிய செய்திகள்

மடிகேரியில் தொழிலாளி கடத்தல் வழக்கில் 14 பேர் கைது

தினத்தந்தி
|
18 Sept 2023 12:15 AM IST

மடிகேரியில் தொழிலாளியை கடத்திய வழக்கில் 14 பேரை போலீசார் கைது செய்தனர்.

குடகு-

மடிகேரியில் தொழிலாளியை கடத்திய வழக்கில் 14 பேரை போலீசார் கைது செய்தனர்.

தொழிலாளி கடத்தல்

குடகு மாவட்டம் மடிகேரி தாலுகாவை சேர்ந்தவர் நிஜாமுதீன் (வயது 35). கூலி தொழிலாளி. அதேபோல மடிகேரி வித்யாநகரை சேர்ந்தவர் முகமது ரஷீத். இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு தனது வீ்ட்டில் கழிவு நீர் தொட்டி தோண்டவேண்டும் என்று நிஜாமுதீனை அழைத்துள்ளார். அதன்படி நிஜாமுதீன், முகமது ரஷீத்தின் வீட்டில் வேலை பார்த்து கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக நிஜாமுதீன் கை, முகமது ரஷீத்தின் மனைவி மீது பட்டது.

இதனால் கோபம் அடைந்த அவர், கத்தி கூச்சலிட்டார். இதை கேட்டு ஓடி வந்த அக்கம் பக்கத்தினர் நிஜாமுதீனை தாக்கி வீட்டில் சிறை வைத்தனர். பின்னர் இதுகுறித்து முகமது ரஷீத்திற்கு தகவல் அளித்தனர். விரைந்து வந்த முகமது ரஷீத், தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து நிஜாமுதீனை கடத்தி சென்றார். பின்னர் நிஜாமுதீனின் மகன் முகமது சைபுதீனை செல்போனில் தொடர்பு கொண்ட அவர்கள் ரூ.5 லட்சம் பணம் கேட்டு மிரட்டியுள்ளனர். இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த முகமது சைபுதீன் மடிகேரி போலீசில் இதுகுறித்து புகார் அளித்தார்.

14 பேர் கைது

அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் கடத்தல் காரர்களை தேடி வந்தனர். இந்தநிலையில் நேற்று இந்த வழக்கு தொடர்பாக 14 பேரை கைது செய்த போலீசார், நிஜாமுதீனை மீட்டனர். பின்னர் கைதானவர்களிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் முகமது ரஷீத் (41), சாமுண்டீஸ்வரி நகரை சேர்ந்த பிரமோத் (31), டோலி (48), தர்ஷன் (48), புருஷோத்தம் (22), மணிகண்டா (24), மங்களாதேவிநகரை சேர்ந்த கிரண்ராய் (32), மஞ்சு (23), கீர்த்தி (31), வித்யாநகரை சேர்ந்த சந்தீப் (37), தபஸ்யா (36) உள்பட 14 பேர் என்பது தெரியவந்தது.

விசாரணையில் கைதான 14 பேர் கொடுத்த தகவலின் பேரில் அவர்களிடம் இருந்து 2 கார்கள், ஆட்டோ, மோட்டார் சைக்கிள்கள், பொம்மை துப்பாக்கி மற்றும் ஆயுதங்களை போலீசார் பறிமுதல் செய்தனர். கைதான 14 பேர் மீதும் மடிகேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்