ஜார்க்கண்ட்: அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்து - 14 பேர் பரிதாப பலி
|ஜார்கண்ட் மாநிலம் தன்பாத் மாவட்டத்தில் கட்டிடம் ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 14 பேர் பரிதாபமாக பலியாகினர்.
ராஞ்சி,
ஜார்கண்ட் மாநிலம் தன்பாத்தில் குடியிருப்பு கட்டிடம் ஒன்றில் இன்று ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 14 பேர் உயிரிழந்தனர்.
தன்பாத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பான ஆஷிர்வாத் டவரில் ஏற்பட்ட தீ, வேகமாக பரவி, மள மளவென குடியிருப்பு முழுவதும் பரவியது.
தகவலறிந்த தீயணைப்பு படையினர் விரைந்து வந்து தீயை அணைக்கப் போராடி வருகின்றனர். இந்த தீ விபத்தில் சிக்கி குழந்தைகள் மற்றும் பெண்கள் உள்பட14 பேர் பலியானதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. கட்டிடத்திற்குள் மேலும் பலர் சிக்கியிருப்பதால், பலி எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.
இந்த சம்பவம் தொடர்பாக முதல்-மந்திரி ஹேமந்த் சோரன் கூறுகையில், "அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்து, என் இதயத்தை உலுக்கியது. மாவட்ட நிர்வாகம் போர்க்கால அடிப்படையில் செயல்பட்டு வருகிறது, காயமடைந்த அனைவருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இறந்தவர்களின் ஆன்மாக்கள் சாந்தியடைய வேண்டும். இந்த கடினமான நேரங்களைத் தாங்கும் வலிமையை அவர்களை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு இறைவன் அருள வேண்டும்" என்றும் அவர் கூறினார்.
தீ விபத்திற்கான காரணம் குறித்து விசாரணை நடந்து வருகிறது. தற்போது, கட்டிடத்தின் ஆறாவது மற்றும் ஏழாவது மாடியில் சிக்கிய குடியிருப்பாளர்களை மீட்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.