இந்தியாவில் 5 ஆண்டுகளில் 13.5 கோடி பேர் வறுமையில் இருந்து மீண்டுள்ளனர் - நிதி ஆயோக் அறிக்கை
|5 ஆண்டுகளில் 13.5 கோடி பேர் பல பரிமாண வறுமை நிலையிலிருந்து மீண்டுள்ளதாக நிதி ஆயோக் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதுடெல்லி,
தேசிய பல பரிமாண வறுமைக் குறியீடு மதிப்பாய்வு 2023-க்கான முன்னேற்றம் என்ற அறிக்கையை நிதி ஆயோக் துணைத் தலைவர் சுமன் பெரி வெளியிட்டார். அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது;-
"சுகாதாரம், கல்வி மற்றும் வாழ்கைத்தரம் ஆகிய மூன்றின் அடிப்படையில் பல பரிமாண வறுமை கணக்கிடப்படுகிறது. அதன்படி உத்தர பிரதேசம், பீகார், மத்திய பிரதேசம், ஒடிசா மற்றும் ராஜஸ்தான் மாநிலங்களில் 2015-16 மற்றும் 2019-21-க்கு இடைப்பட்ட 5 ஆண்டு காலகட்டத்தில் பல பரிமாண வறுமையிலிருந்து 13.5 கோடி பேர் வெளியேறியுள்ளனர்.
2015-16ல் 24.85 சதவீதமாக இருந்த இந்த வறுமை 2019-21ல் 14.96 சதவீதமாக குறைந்துள்ளது. 5 ஆண்டுகளில் 9.89 சதவீத புள்ளிகள் குறைந்துள்ளது. கிராமங்களில் வறுமை 32.59 சதவீதத்திலிருந்து 19.28 சதவீதமாகவும், நகர்ப்புறங்களில் வறுமை 8.65 சதவீதத்தில் இருந்து 5.27 சதவீதமாகவும் குறைந்துள்ளது.
சுகாதாரம், நிதி சேவை, குடிநீர், மின்சாரம், ஊட்டச்சத்து, சமையல் எரிவாயு ஆகியவற்றை மக்களுக்கு கிடைக்கச் செய்வதில் சம்பந்தப்பட்ட மாநில அரசுகள் அர்பணிப்பு உணர்வுடன் செயல்பட்டதால் இந்தப் பகுதிகளில் வறுமையின் நிலை கணிசமாக குறைந்து மக்களின் முன்னேற்றத்துக்கு வழிவகுத்துள்ளது."
இவ்வாறு நிதி ஆயோக் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.