< Back
தேசிய செய்திகள்
அரசு போக்குவரத்து கழகத்தில் 13 ஆயிரம் பணியிடங்கள் நிரப்பப்படும்
தேசிய செய்திகள்

அரசு போக்குவரத்து கழகத்தில் 13 ஆயிரம் பணியிடங்கள் நிரப்பப்படும்

தினத்தந்தி
|
10 Sept 2023 12:15 AM IST

கர்நாடக அரசு போக்குவரத்து கழகத்தில் காலியாக உள்ள 13 ஆயிரம் பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும் என போக்குவரத்து துறை மந்திரி ராமலிங்கரெட்டி கூறினார்.

மைசூரு

ஜெயந்தி விழா

மைசூரு ஜெகன்மோகன் அரண்மனையில் நேற்று கர்நாடக அரசு போக்குவரத்து கழகம் எஸ்.சி, எஸ்.டி. ஊழியர்கள் சங்கம் சார்பில் அம்பேத்கர் ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது. விழாவில் கர்நாடக போக்குவரத்து மற்றும் இந்து சமய அறநிலையத்துறை மந்திரி ராமலிங்கரெட்டி கலந்து கொண்டார். பின்னர் அவர் பேசும்போது கூறியதாவது:-

கர்நாடக அரசு போக்குவரத்து கழகத்தில் காலியாக உள்ள 13 ஆயிரம் பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும்.

கடந்த சில ஆண்டுகளாக போக்குவரத்து கழகத்தில் ஊழியர்களுக்கு சம்பளம் கொடுக்காமல் பா.ஜனதா அரசு நிறுத்தி வைத்திருந்தது. தற்போது அந்த சம்பள தொகையை ஊழியர்களுக்கு கொடுப்பதற்கு காங்கிரஸ் அரசு முன் வந்துள்ளது.

கர்நாடக அரசு போக்குவரத்து கழகத்திற்கு பல்வேறு விருதுகள் கிடைத்துள்ளது. இந்த விருதுகள், போக்குவரத்து கழகத்தில் வேலை பார்க்கும் அனைவரின் உழைப்பால் கிடைத்துள்ளது.

பஸ்களில் இலவச பயணம்

காங்கிரஸ் கட்சி தேர்தல் அறிக்கையில் கூறியிருந்தது போல அரசு பஸ்களில் பெண்களுக்கு இலவச பயண திட்டத்தை அமலுக்கு கொண்டு வந்துள்ளது. இந்த திட்டத்தால் போக்குவரத்து துறைக்கு கோடிக்கணக்கில் நஷ்டம் ஏற்பட்டுள்ளது என எதிர்க்கட்சிக்காரர்கள் கூறி வருகிறார்கள்.

மேலும் போக்குவரத்து ஊழியர்களுக்கு சம்பளம் கொடுக்க முடியாது. போக்குவரத்து கழகத்தை மூடும் நிலைமை வந்துவிடும் எனவும் அவர்கள் கூறி வருகிறார்கள்.

ஆனால் உண்மையிலேயே சக்தி திட்டத்தால் நஷ்டத்திற்கு பதிலாக லாபமே வந்து கொண்டிருக்கிறது. பெண்கள் இலவச பயணம் செல்லும் போது அவர்கள் தனியாக செல்வதில்லை.

அவர்களது வீட்டில் இருக்கும் கணவர், ஆண் பிள்ளைகளை அழைத்து செல்கிறார்கள். இதன் மூலம் போக்குவரத்து கழகத்திற்கு லாபம் வருகிறது.

அரசுக்கு நஷ்டம் ஏற்படவில்லை

இந்த திட்டத்தால் அரசு பஸ்களில் ஏராளமான பெண்கள் பிரசித்தி பெற்ற கோவில்களுக்கு செல்கிறார்கள். அங்கு உண்டியலில் காணிக்கை செலுத்துவதன் மூலம் அறநிலையத்துறைக்கு வருமானம் கிடைக்கிறது. சக்தி திட்டத்தால் மாநில அரசுக்கு எந்தவொரு நஷ்டமும் ஏற்படவில்லை.

பெண்கள் அரசு பஸ்களில் இலவசமாக பயணம் செய்வது எதிர்க்கட்சிக் காரர்களுக்கு வயிறு எரிகிறது. இதனால் தான் அரசுக்கு நஷ்டம் ஏற்படுகிறது என புலம்பி வருகிறார்கள்.

இவ்வாறு மந்திரி ராமலிங்க ரெட்டி கூறினார்.

மேலும் செய்திகள்