< Back
தேசிய செய்திகள்
13 தொகுதி இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை: இந்தியா கூட்டணி அதிக இடங்களில் முன்னிலை

கோப்புப்படம் PTI

தேசிய செய்திகள்

13 தொகுதி இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை: இந்தியா கூட்டணி அதிக இடங்களில் முன்னிலை

தினத்தந்தி
|
13 July 2024 5:26 AM GMT

நாடு முழுவதும் இடைத்தேர்தல் நடைபெற்ற 13 தொகுதிகளில் இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது.

புதுடெல்லி,

நாடு முழுவதும் 7 மாநிலங்களில் உள்ள 13 சட்டமன்ற தொகுதிகளுக்கு கடந்த 10-ந்தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது. தமிழ்நாட்டில் விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தி.மு.க. சட்டமன்ற தொகுதி உறுப்பினராக இருந்த நா.புகழேந்தி கடந்த ஏப்ரல் மாதம் மரணம் அடைந்ததையடுத்து, விக்கிரவாண்டி தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெற்றது.

இதே போல மேற்கு வங்காளத்தில் உள்ள ராய்கஞ்ச், ரனாகாட் தக்சின், பாக்தா மற்றும் மணிக்தலா ஆகிய 4 தொகுதிகள், மத்திய பிரதேசத்தில் அமர்வாரா, பீகாரில் ரூபாலி, உத்தரகாண்டில் உள்ள பத்ரிநாத் மற்றும் மங்களூர், பஞ்சாப்பில் ஜலந்தர் மேற்கு, இமாசல பிரதேசத்தில் டேஹ்ரா, ஹமிர்பூர் மற்றும் நலகர் ஆகிய தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடைபெற்றது.

இந்த நிலையில் இடைத்தேர்தல் நடைபெற்ற 13 தொகுதிகளிலும் இன்று வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படுகின்றன. பஞ்சாப்பில் உள்ள ஜலந்தர் மேற்கு தொகுதியில் இந்தியா கூட்டணியில் உள்ள காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி இடையே பிரதான போட்டி நிலவுகிறது. மற்ற 12 தொகுதிகளிலும் தேசிய ஜனநாயக கூட்டணி - இந்தியா கூட்டணி கட்சிகள் இடையே போட்டி நிலவுகிறது. 13 தொகுதிகளிலும் காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கி நடைபெற்று வருகிறது.

வாக்குகள் எண்ணப்பட்டு வரும் நிலையில், முன்னிலை நிலவரம் வெளியாகி உள்ளது. அதன்படி பஞ்சாப்பில் உள்ள ஜலந்தர் மேற்கு தொகுதியில் ஆம் ஆத்மி முன்னிலையில் உள்ளது. மீதமுள்ள 12 தொகுதிகளில் 10-ல் இந்தியா கூட்டணி முன்னிலை வகிக்கிறது. இமாசல பிரதேசத்தில் 3 தொகுதிகள் மற்றும் உத்தரகாண்டில் 2 தொகுதிகளில் காங்கிரஸ் முன்னிலை வகிக்கிறது. மேற்கு வங்காளத்தில் 4 தொகுதிகளிலும் திரிணாமுல் காங்கிரஸ் முன்னிலை வகிக்கிறது. தமிழ்நாட்டில் விக்கிரவாண்டி தொகுதியில் தி.மு.க. முன்னிலை வகிக்கிறது.

மத்திய பிரதேசத்தில் அமர்வாரா தொகுதியில் பா.ஜ.கவும், பீகாரில் ரூபாலி தொகுதியில் ஐக்கிய ஜனதா தளமும் முன்னிலையில் உள்ளன.

மேலும் செய்திகள்