< Back
தேசிய செய்திகள்
மராட்டியம், கர்நாடகாவில் என்.ஐ.ஏ. சோதனை- 13 பேர் கைது
தேசிய செய்திகள்

மராட்டியம், கர்நாடகாவில் என்.ஐ.ஏ. சோதனை- 13 பேர் கைது

தினத்தந்தி
|
9 Dec 2023 1:47 PM IST

திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்ட இரண்டு நபர்களுக்கு ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்புடன் தொடர்பு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து சோதனை நடத்தப்படுகிறது.

மும்பை,

ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாதம் தொடர்பான சந்தேகத்தின்பேரில், மராட்டிய மாநிலத்தின் பல்வேறு இடங்களில் என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். மாநிலம் முழுவதும் சுமார் 40 இடங்களில் சோதனை நடைபெறுகிறது.

இந்த சோதனை பெரும்பாலும் தானே நகரத்தை சுற்றியே நடைபெறுகிறது. தானே மாவட்டத்தில் 31 இடங்களிலும், புனேவில் 2 இடங்களிலும் மற்றும் மீரா பயந்தரில் ஒரு இடத்திலும் என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனை நடத்தினர். கர்நாடகாவில் ஒரு இடத்தில் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்ட இரண்டு நபர்களுக்கு ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்புடன் தொடர்பு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து, இன்று அதிகாலை முதல் சோதனை நடத்தப்படுகிறது. அந்த வழக்கு பயங்கரவாத தடுப்பு பிரிவுக்கு மாற்றப்பட்டது.

இன்றைய சோதனையின்போது 13 பேரை என்.ஐ.ஏ அதிகாரிகள் சந்தேகத்தின் பேரில் விசாரித்தனர். விசாரணைக்குப் பின்னர் அவர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்படுகிறது.

கடந்த ஆகஸ்டு மாதம் தானே மாவட்டத்தில் நடந்த சோதனையிலும் ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாத ஆதரவாளர்கள் கைது செய்யப்பட்டு, அவர்களிடம் இருந்து ஏராளமான ஆவணங்களை என்.ஐ.ஏ அதிகாரிகள் பறிமுதல் செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்