ராய்ச்சூர் அருகே வடகல் கிராமத்தில் 12-ம் நூற்றாண்டை சேர்ந்த கல்வெட்டுகள் கண்டுபிடிப்பு
|ராய்ச்சூர் அருகே வடகல் கிராமத்தில் கி.பி. 12-ம் நூற்றாண்டை ேசர்ந்த 3 கல்வெட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
ராய்ச்சூர்:
3 கல்வெட்டு கண்டுபிடிப்பு
ராய்ச்சூர் மாவட்டம் மஸ்கி தாலுகாவில் வடகல் கிராமம் உள்ளது. இது மிகவும் பழமையான கிராமம் என்று கூறப்படுகிறது. இந்த கிராமத்தில் அனுமன் கோவில் மற்றும் ஈஸ்வரன் கோவில் உள்ளது. இந்த கோவில்களில் கடந்த சில நாட்களுக்கு முன்பு 3 கல்வெட்டுகள் தொல்லியல் துறையினரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதாவது அனுமன் கோவிலில் 2 கல்வெட்டுகளும், ஈஸ்வரன் கோவிலில் ஒரு கல்வெட்டையும் கண்டுபிடித்துள்ளனர்.
இதில் அனுமன் கோவிலில் கிடைத்த முதல் கல்வெட்டில் 7 தலையுடன் கூடிய நாகபாம்பின் வடிவம் இருந்தது. அதையொட்டி 23 வரிகளில் கன்னட மொழியில் எழுத்துகள் இருந்தது. இதை தொல்லியல் துறை அதிகாரிகள் ஆய்வு செய்தபோது கி.பி. 12-ம் நூற்றாண்டில் வாழ்ந்த (கி.பி.1184-1198) கல்யாண சாளுக்கிய மன்னரான நான்காம் சோமேஸ்வரர் காலத்தை சேர்ந்தது என்று கூறப்படுகிறது. இவர் அப்போது மகாமண்டலேஸ்வராக ஆட்சி புரிந்துள்ளார். மேலும் அந்த கல்வெட்டில் நாகவர்ம அரசர் மற்றும் நாகராசாவின் பெயர்கள் எழுதப்பட்டிருந்தது.
2-வது கல்வெட்டு
இதேபோல 2-வது கல்வெட்டில் சூரியன், சந்திரன், நந்தி, காள முகமுனி மற்றும் வாள் போன்ற சிற்பங்களும், கல்யாண சாளுக்கிய மன்னன் ஆறாம் விக்ரமாதித்யனின் பெயரும் இருந்தது.
மூன்றாவது கல்வெட்டில் மொரட்டா என்று கன்னடத்தில் எழுதப்பட்டிருந்தது. இந்த கல்வெட்டை ஆய்வு செய்தபோது, அது கி.பி.18-ம் மற்றும் 19-ம் நூற்றாண்டை சேர்ந்தது என்று கூறப்படுகிறது. இந்த கல்வெட்டில் இருந்த மொரட்டா என்ற எழுத்து சிர்வாரா தாலுகாவில் உள் மல்லட்டா என்ற கிராமத்தின் பெயரை குறிப்பதாக கூறப்படுகிறது.
தொல்லியத்துறை ஆய்வு
இந்த கல்வெட்டுகளை கைப்பற்றிய தொல்லியல்துறை அதிகாரிகள் அதை ஆய்விற்காக அனுப்பி வைத்துள்ளனர். அரசர் காலத்து கல்வெட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டிருப்பது வடகல் கிராம மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.