'ஆபரேஷன் அஜய்' மூலம் இஸ்ரேலில் இருந்து இதுவரை 1,200 இந்தியர்கள் அழைத்து வரப்பட்டுள்ளனர் - வெளியுறவுத்துறை தகவல்
|‘ஆபரேஷன் அஜய்’ மூலம் இஸ்ரேலில் இருந்து இதுவரை 1,200 இந்தியர்கள் அழைத்து வரப்பட்டுள்ளதாக மத்திய வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது.
புதுடெல்லி,
இஸ்ரேல்-ஹமாஸ் இடையிலான போர் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. இதனிடையே இஸ்ரேலில் சிக்கியுள்ள இந்தியர்களை பத்திரமாக மீட்பதற்காக 'ஆபரேஷன் அஜய்' என்ற திட்டத்தை இந்திய அரசு செயல்படுத்தி வருகிறது. இதன்படி இஸ்ரேலில் இருந்து சிறப்பு விமானங்கள் மூலம் இந்தியர்கள் பத்திரமாக அழைத்து வரப்படுகின்றனர்.
இந்நிலையில் மத்திய வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் அரிந்தம் பக்ஷி இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர், இஸ்ரேலில் இருந்து இதுவரை 5 சிறப்பு விமானங்களில் மொத்தம் 1,200 இந்தியர்கள் அழைத்து வரப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
இஸ்ரேல்-ஹமாஸ் மோதல் விவகாரத்தில், பாலஸ்தீன மக்களுக்காகவும், அகதிகளுக்காகவும் ஐக்கிய நாடுகள் சபையின் மூலமாக இந்தியா தொடர்ந்து ஆதரவு அளித்து வருவதாக அவர் கூறினார். பயங்கரவாதத்தை எதிர்ப்பதில் சர்வதேச சமூகம் ஒன்றுபட்டு நிற்க வேண்டும் என்று இந்தியா வலியுறுத்துவதாகவும் அவர் தெரிவித்தார்.