மத்திய பிரதேசத்தில் 12 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை - முக்கிய குற்றவாளி கைது
|சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தில் முக்கிய குற்றவாளியை கைது செய்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
போபால்,
மத்திய பிரதேச மாநிலம் உஜ்ஜைன் பகுதியில் 12 வயது சிறுமி அரை நிர்வாண கோலத்தில், உடலில் ரத்தம் வழிந்த நிலையில் வீடு, வீடாகச் சென்று உதவி கேட்டது தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. அந்த சிறுமிக்கு யாரும் உதவி செய்யாத நிலையில், அந்த பகுதியில் உள்ள ஒரு ஆசிரமத்தைச் சேர்ந்தவர்கள் சிறுமியை மீட்டு போலீசுக்கு தகவல் கொடுத்துள்ளனர்.
பின்னர் அந்த சிறுமி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு மேற்கொள்ளப்பட்ட மருத்துவ பரிசோதனையில் சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளானது உறுதி செய்யப்பட்டுள்ளது. இருப்பினும் அந்த சிறுமியால் சரிவர பேச முடியாததால், அவரிடம் இருந்து வாக்குமூலம் பெற முடியவில்லை என போலீசார் தெரிவித்தனர்.
இதனிடையே சி.சி.டி.வி. ஆதாரங்களை வைத்து குற்றவாளிகளை தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டு வந்தனர். முன்னதாக ஒரு ஆட்டோ டிரைவர் உள்ளிட்ட 4 பேரைப் பிடித்து போலீசார் விசாரணை நடத்திய நிலையில், தற்போது இந்த வழக்கின் முக்கிய குற்றவாளியான பாரத் சோனி என்ற நபரை கைது செய்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
மேலும் போலீசாரின் பிடியில் இருந்து பாரத் சோனி தப்பி ஓட முயன்றதாகவும், அப்போது கீழே விழுந்து அவரது கை, கால்களில் காயங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து கைது செய்யப்பட்ட நபரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.