< Back
தேசிய செய்திகள்
விளைநிலங்களில் புகுந்து 12 காட்டு யானைகள் அட்டகாசம்
தேசிய செய்திகள்

விளைநிலங்களில் புகுந்து 12 காட்டு யானைகள் அட்டகாசம்

தினத்தந்தி
|
2 Oct 2023 12:15 AM IST

பங்காருபேட்டையில் விளைநிலங்களில் புகுந்து 12 காட்டு யானைகள் அட்டகாசம் செய்தன. அப்போது கிராம மக்கள் வனத்துறையினரை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

கோலார் தங்கவயல்

காட்டு யானைகள் அட்டகாசம்

கோலார் மாவட்டம் பங்காருபேட்டை தாலுகாவில் காமசமுத்திரம் அருகே செங்கேனஹள்ளி கிராமம் உள்பட 10 கிராமங்கள் தமிழக வனப்பகுதியையொட்டி அமைந்துள்ளது. இந்த தமிழக வனப்பகுதிகளில் இருந்து அடிக்கடி காட்டு யானைகள் வெளியேறி கர்நாடக கிராமத்துக்குள் புகுந்து தொடர்ந்து அட்டகாசம் செய்து வருகின்றன.

அங்குள்ள விைளநிலங்களில் புகுந்து பயிர்களை காட்டு யானைகள் நாசப்படுத்துவதால் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் விவசாயிகள், காட்டு யானைகள் ெவளியேறாமல் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வனத்துறையினருக்கு கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

வனத்துறையினரும் காட்டு யானைகளை வனப்பகுதிக்குள் விரட்டியடித்தாலும் அவை, மீண்டும், மீண்டும் வெளியேறி தொடர்ந்து அட்டகாசம் செய்து வருகின்றன.

ரூ.30 லட்சம் நஷ்டம்

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு தமிழக வனப்பகுதியில் இருந்து 12 காட்டு யானைகள் வெளியேறின. அவை, செங்கேனஹள்ளி கிராமத்தையொட்டி உள்ள விளைநிலங்களில் புகுந்தன.

அங்கு பயிரிட்டிருந்த தக்காளி, முட்டைகோஸ், மக்காச்சோளம், நெல், கேழ்வரகு ஆகியவற்றை மிதித்தும், தின்றும் நாசப்படுத்தின. பின்னர் அந்த காட்டு யானைகள் வனப்பகுதிக்குள் சென்றுவிட்டன.

இந்த நிலையில் நேற்று காலை விவசாயிகள் தங்கள் விளைநிலங்களுக்கு சென்றனர். அப்போது பயிர்கள் நாசமாகி கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். அப்போது காட்டு யானைகள் வெளியேறி பயிர்களை நாசப்படுத்தியது தெரியவந்தது. இதனால் சுமார் ரூ.30 லட்சம் வரை விவசாயிகளுக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளது.

முற்றுகை போராட்டம்

இதுபற்றிய தகவல் அறிந்ததும் வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பார்வையிட்டனர். அப்போது கிராம மக்கள், திடீரென்று வனத்துறையினரை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது அவர்கள், எங்கள் பகுதியில் காட்டு யானைகள் தொடர்ந்து அட்டகாசம் செய்து வருகின்றன. அதனை தடுக்க வனத்துறையினர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

யானைகள் அட்டகாசத்தால் எங்களுக்கு பல லட்சம் ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. எங்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும். காட்டு யானைகள் வெளியேறாமல் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

கிராம மக்களின் கோரிக்கையை ஏற்ற வனத்துறையினர், காட்டு யானைகளை விரட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு தக்க நிவாரணம் வழங்கப்படும் என்றும் உறுதி அளித்தனர்.

இதையடுத்து கிராம மக்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்