< Back
தேசிய செய்திகள்
இமாசலபிரதேசத்தில் பள்ளத்தில் பஸ் கவிழ்ந்து பள்ளி மாணவர்கள் உள்பட 12 பேர் சாவு
தேசிய செய்திகள்

இமாசலபிரதேசத்தில் பள்ளத்தில் பஸ் கவிழ்ந்து பள்ளி மாணவர்கள் உள்பட 12 பேர் சாவு

தினத்தந்தி
|
5 July 2022 12:11 AM IST

இமாசல பிரதேசத்தில் பள்ளி பஸ் ஒன்று பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் பள்ளி மாணவர்கள் உள்பட 12 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

சிம்லா,

கட்டுப்பாட்டை இழந்தது

இமயமலை பிராந்தியத்தில் அமைந்துள்ள இமாசல பிரதேச மாநிலம், மலைப்பிரதேச பகுதிகள் மற்றும் பள்ளத்தாக்குகளை கொண்டதாகும்.

இந்த மாநிலத்தின் குலுவில் இருந்து ஷைன்ஷெர் பகுதிக்கு நேற்று காலையில் தனியார் பஸ் ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்த பஸ்சில் பள்ளி மாணவ-மாணவிகள் உள்பட ஏராளமான பயணிகள் இருந்தனர்.

இந்த பஸ் ஜங்லா கிராமத்துக்கு அருகே உள்ள கொண்டை ஊசி வளைவு ஒன்றில் திரும்பியபோது, திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து அருகில் உள்ள பள்ளத்தில் கவிழ்ந்தது.

இதில் பஸ் அப்பளம்போல நொறுங்கியது. இதனால் பஸ்சில் இருந்த பயணிகள் அனைவரும் இடிபாடுகளுக்குள் சிக்கி மரண ஓலமிட்டனர். இதில் ஏராளமானோர் படுகாயமடைந்தனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

12 பேர் சாவு

விபத்து குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற போலீசார், கிராம மக்கள் உதவியுடன் மீட்பு பணிகளை மேற்கொண்டனர். அவர்கள் காயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள ஆஸ்பத்திரிகளுக்கு அனுப்பி வைத்தனர்.

எனினும் இந்த விபத்தில் பள்ளி மாணவர்கள் உள்பட 12 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். பஸ் கண்டக்டர் உள்பட 3 பேர் படுகாயமடைந்தனர். அவர்களுக்கு குலு பிராந்திய ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

விபத்து நடந்து பல மணி நேரத்துக்குப்பின்னரே மீட்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டதாகவும், இதனால்தான் உயிரிழப்பு அதிகரித்து இருப்பதாகவும் உயிரிழந்தவர்களின் உறவினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

ஜனாதிபதி இரங்கல்

இதற்கிடையே பள்ளத்தில் பஸ் கவிழ்ந்து 12 பேர் உயிரிழந்த சம்பவத்துக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் இரங்கல் தெரிவித்து உள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது டுவிட்டர் தளத்தில், 'இமாசல பிரதேசத்தின் குலுவில் நடந்த பஸ் விபத்தில் மாணவர்கள் உள்பட பலர் பலியான தகவல் கேட்டு வேதனையடைந்தேன். உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு எனது ஆழ்ந்த இரங்கல்கள். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வாழ்த்துகிறேன்' என்று குறிப்பிட்டு உள்ளார்.

பிரதமர் நிவாரணம் அறிவிப்பு

இதைப்போல பலியானவர்களின் குடும்பத்துக்கு பிரதமர் மோடியும் இரங்கல் தெரிவித்து இருக்கிறார். இந்த விபத்து சம்பவம் இதயத்தை பிளக்கும் வகையில் இருப்பதாக கூறியிருந்த பிரதமர் மோடி, காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திப்பதாகவும் டுவிட்டர் தளத்தில் குறிப்பிட்டு இருந்தார்.

மேலும் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு பிரதமரின் தேசிய நிவாரண நிதியில் இருந்து தலா ரூ.2 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு ரூ.50 ஆயிரமும் வழங்கப்படும் எனவும் அறிவித்து உள்ளார்.

விசாரணைக்கு உத்தரவு

இதைப்போல உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு மாநில அரசு சார்பில் தலா ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என முதல்-மந்திரி ஜெய்ராம் தாகூர் அறிவித்து உள்ளார். காயமடைந்தவர்களுக்கு இலவச சிகிச்சையும், உடனடி நிவாரணமாக ரூ.15 ஆயிரமும் வழங்கப்படுவதாகவும் அவர் கூறியுள்ளார்.

விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு இரங்கல் தெரிவித்து உள்ள ஜெய்ராம் தாகூர், விபத்து குறித்து நீதி விசாரணைக்கும் உத்தரவிட்டு உள்ளார்.

பள்ளத்தில் பஸ் கவிழ்ந்து 12 பேர் உயிரிழந்த சம்பவம் இமாசல பிரதேசத்தில் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்