< Back
தேசிய செய்திகள்
5 போர்களை கண்ட சாம் பகதூரின் 110-வது பிறந்த தினம்; இந்திய ராணுவம் அஞ்சலி
தேசிய செய்திகள்

5 போர்களை கண்ட சாம் பகதூரின் 110-வது பிறந்த தினம்; இந்திய ராணுவம் அஞ்சலி

தினத்தந்தி
|
3 April 2024 11:50 AM IST

பிரிட்டிஷ் இந்திய ராணுவத்தில் 1932-ம் ஆண்டு தன்னுடைய 18-ம் வயதில் சேர்ந்த சாம் பகதூர் 2-ம் உலக போரில் திறமையாக செயல்பட்டார்.

புதுடெல்லி,

இந்திய ராணுவத்தில் பணிபுரிந்த பீல்டு மார்ஷல் சாம் ஹார்மஸ்ஜி பிரேம்ஜி ஜாம்ஷெட்ஜி மாணிக்ஷாவின் பிறந்த தினம் இன்று கொண்டாடப்படுகிறது. சாம் பகதூர் என்ற பிரபல பெயரால் அறியப்படுகிறார்.

பாகிஸ்தானுக்கு எதிராக 1971-ல் நடந்த போரில் இந்தியா வெற்றி பெற திட்டங்களை வகுத்து செயல்பட்டவர். இந்த போரின் தொடர்ச்சியாக வங்காளதேசம் என்ற தனி நாடு உருவானது.

பஞ்சாப்பின் அமிர்சரஸ் நகரில் 1914-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் இதே தினத்தில் (ஏப்.3) பிறந்த அவர், பல ராணுவ வெற்றிகளை கட்டமைத்தவர். தமிழகத்தின் வெலிங்டன் நகரில் ராணுவ மருத்துவமனையில், நிம்மோனியா பாதிப்புக்காக 2008-ம் ஆண்டு சிகிச்சை பெற்றார். எனினும் அதில் பலனின்றி, ஜூன் 27-ல் அவருடைய 94-வது வயதில் காலமானார்.

அவருக்கு இந்திய ராணுவம் எக்ஸ் சமூக ஊடகத்தின் வழியே அஞ்சலி செலுத்தியுள்ளது. பிரிட்டிஷ் இந்திய ராணுவத்தில் 1932-ம் ஆண்டு தன்னுடைய 18-ம் வயதில் சேர்ந்த சாம் பகதூர் 2-ம் உலக போரில் திறமையாக செயல்பட்டார். இதற்காக மிலிட்டரி கிராஸ் என்ற விருது வழங்கி அவர் கவுரவிக்கப்பட்டார்.

அவருடைய பிறந்த நாளை முன்னிட்டு, காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே வெளியிட்ட அஞ்சலி செய்தியில், 5 போர்களை கண்டவர். ஆயுத படைகளின் தலைவராக 4 தசாப்தங்களாக செயல்பட்டவர். நாட்டுக்கான அவருடைய சுயநலமற்ற சேவை, அழிவில்லா உந்துசக்தியாக இருக்கும் என தெரிவித்து உள்ளார்.

இதேபோன்று, மத்திய மந்திரி ஜே.பி. நட்டா வெளியிட்ட அஞ்சலி செய்தியில், பத்ம விபூஷண் பீல்டு மார்ஷலான சாம் மாணிக்சாஜியின் பிறந்த ஆண்டுதினத்தில் அவரை நினைவுகூர்கிறோம் என்று தெரிவித்து உள்ளார்.

மேலும் செய்திகள்