11 வயது சிறுவனை அடித்து மத கோஷங்களை சொல்ல சொன்னதால் பரபரப்பு - போலீசார் விசாரணை
|இந்தூரில் 11-வயது சிறுவனை அடித்து மத கோஷங்களை சொல்ல சொன்ன சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
போபால்,
மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரில் 11 வயது சிறுவனை அடித்து, மத கோஷங்களை சொல்ல சொல்லி கட்டாயப்படுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
குற்றம் சாட்டப்பட்ட சிறுவர்கள், பாதிக்கப்பட்ட சிறுவனை ஆடைகளை கழற்றுமாறு வற்புறுத்தியதாகவும், அவனை மத கோஷங்களை எழுப்பச் சொல்லி கட்டாயப்படுத்தி, அதை வீடியோ எடுத்ததாகவும் கூறப்படுகிறது. இது தொடர்பாக கடத்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
லசுடியா காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட இந்தூரில் உள்ள நிபானியா பகுதியில் இந்த சம்பவம் நடந்துள்ளது. சிறுவன் நட்சத்திர சதுக்கத்திற்கு அருகில் விளையாடிக் கொண்டிருந்தபோது குற்றம் சாட்டப்பட்ட சிறுவர்கள், பைபாசில் குறைந்த விலைக்கு பொம்மைகள் விற்கப்படுவதாக கூறியுள்ளனர்.
பொம்மைகளைப் பெற்றுத் தருவதாகக் கூறி, குற்றம் சாட்டப்பட்டவர்கள் சிறுவனை மகாலட்சுமி நகர் அருகே அழைத்துச் சென்று மதக் கோஷங்களை எழுப்பும்படி வற்புறுத்தியுள்ளனர். மேலும் சிறுவனை அடித்து ஆடைகளை கழற்ற வைத்ததாகவும் கூறப்படுகிறது. பாதிக்கப்பட்ட சிறுவன் தப்பித்து வந்து தனது குடும்பத்தினருக்கு தகவல் கொடுத்துள்ளான். இதையடுத்து அவர்கள் போலீசில் புகார் அளித்தனர்.
இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணையை தொடங்கி, கடத்தல், தானாக முன்வந்து காயப்படுத்துதல் மற்றும் குற்றவியல் மிரட்டல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது, பாதிக்கப்பட்ட சிறுவனுக்கு விரைந்து நீதி கிடைக்க வேண்டும் என பலர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது தொடர்பாக போலீசார் வெளியிட்டுள்ள அறிக்கையில் குற்றம் சாட்டப்பட்டவர்களை கைது செய்துள்ளோம் என்றும் இந்த சம்பவத்தின் வீடியோவை சமூக வலைதளங்களில் பகிர வேண்டாம் என்றும் மக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.