< Back
தேசிய செய்திகள்
11 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த  வாலிபருக்கு 3 ஆண்டு சிறை
தேசிய செய்திகள்

11 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபருக்கு 3 ஆண்டு சிறை

தினத்தந்தி
|
29 Jun 2023 12:15 AM IST

சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் வாலிபருக்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதித்து சிவமொக்கா கோர்ட்டு தீர்ப்பளித்தது.

சிவமொக்கா-

சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் வாலிபருக்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதித்து சிவமொக்கா கோர்ட்டு தீர்ப்பளித்தது.

சிறுமிக்கு பாலியல் தொல்லை

சிவமொக்கா மாவட்டம் பத்ராவதி தாலுகா பகுதியை சேர்ந்த 11 வயது சிறுமி தனது குடும்பத்துடன் வசித்து வருகிறாள். அவள் அப்பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 5-ம் வகுப்பு படித்து வந்தாள். இந்தநிலையில், சிறுமி பள்ளிக்கு செல்லும் போது அதேப்பகுதியை சேர்ந்த 25 வயது வாலிபர் அடிக்கடி பேசி வந்துள்ளார். சம்பவத்தன்று சிறுமி வீட்டின் அருகே விளையாடி கொண்டு இருந்தாள்.

அப்போது அந்த வழியாக வந்த வாலிபர் சிறுமியிடம் ஆசைவார்த்தை கூறி அவரது வீட்டிற்கு அழைத்து சென்று பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இது யாரிடமும் கூறக்கூடாது என சிறுமியை மிரட்டி உள்ளார். இந்தநிலையில், சிறுமி யாரிடமும் பேசாமல் இருந்துள்ளார்.

இதுகுறித்து சிறுமியிடம் பெற்றோர் கேட்டனர். அப்போது தனக்கு நடந்த கொடுமைகளை பெற்றோரிடம் கூறி சிறுமி அழுதுள்ளார். இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர் இதுகுறித்து பத்ராவதி டவுன் போலீசில் புகார் அளித்தனர்.

வாலிபருக்கு 3 ஆண்டு சிறை

அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து வாலிபரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இதுதொடர்பான வழக்கு சிவமொக்கா மாவட்ட கோர்ட்டில் நடந்து வந்தது. மேலும் கோர்ட்டில் குற்றபத்திரிகையை போலீசார் தாக்கல் செய்தனர்.

இந்த வழக்கின் விசாரணை நிறைவு பெற்றதை தொடர்ந்து நீதிபதி நேற்று முன்தினம் தீர்ப்பு கூறினார். அதில், 11 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபருக்கு 3 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.2.80 லட்சம் அபராதமும் விதித்து உத்தரவிட்டார்.


மேலும் செய்திகள்