< Back
தேசிய செய்திகள்
நாடாளுமன்ற மேலவைக்கு மத்திய மந்திரி ஜெய்சங்கர் உள்பட 11 பேர் போட்டியின்றி தேர்வு
தேசிய செய்திகள்

நாடாளுமன்ற மேலவைக்கு மத்திய மந்திரி ஜெய்சங்கர் உள்பட 11 பேர் போட்டியின்றி தேர்வு

தினத்தந்தி
|
17 July 2023 6:58 PM IST

நாடாளுமன்ற மேலவைக்கு மத்திய மந்திரி ஜெய்சங்கர் உள்பட 11 பேர் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர்.

புதுடெல்லி,

கோவா, குஜராத் மற்றும் மேற்கு வங்காளம் ஆகிய மாநிலங்களை சேர்ந்த நாடாளுமன்ற மேலவை உறுப்பினர்கள் 11 பேர், நடப்பு ஜூலை மற்றும் ஆகஸ்டு மாதங்களில் ஓய்வு பெறுகின்றனர்.

இதனை தொடர்ந்து, காலியாகவுள்ள அந்த 11 ராஜ்யசபை இடங்களுக்கு உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்கு தேர்தல் நடத்துவது என தேர்தல் ஆணையம் முடிவு செய்தது. இதற்கான தேர்தல் வருகிற ஜூலை 24-ந்தேதி நடத்தப்படும் என இந்திய தலைமை தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டது.

இவர்களில் தெரிக் ஓ பிரையன் (மேற்கு வங்காளம்) மற்றும் எஸ். ஜெய்சங்கர் (குஜராத்) உள்ளிட்டோர் முக்கியம் வாய்ந்தவர்கள் ஆவர். கோவாவில் இருந்து வினய் தெண்டுல்கர் ஓய்வு பெறுகிறார்.

அவர்களில் மத்திய மந்திரியான சுப்ரமணியம் ஜெய்சங்கர் கிருஷ்ணசுவாமி வருகிற ஆகஸ்டு 18-ந்தேதியுடன் ஓய்வு பெறுகிறார். இதனையடுத்து, மத்திய வெளிவிவகார மந்திரியான ஜெய்சங்கர் குஜராத்தின் காந்தி நகரில் இருந்து வேட்பு மனு தாக்கல் செய்து உள்ளார்.

காலியாகவுள்ள இந்த இடங்களுக்கு வேட்பு மனுக்களை தாக்கல் செய்வதற்கு வருகிற ஜூலை 13-ந்தேதி கடைசி நாளாக அறிவிக்கப்பட்டது. வேட்பு மனுக்களை திரும்ப பெற இன்றே கடைசி நாளாகும்.

இந்த தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை வருகிற ஜூலை 24-ந்தேதி நடத்தப்படும். இந்நிலையில், நாடாளுமன்ற மேலவையில் மத்திய மந்திரி ஜெய்சங்கர் உள்பட 11 பேர் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர்.

இவற்றில் மேற்கு வங்காளத்தில் 6 இடங்கள், குஜராத்தில் 3 இடங்கள் மற்றும் கோவாவில் ஓர் இடத்தில் வாக்கெடுப்பு எதுவும் நடைபெறாது. ஏனெனில், இந்த இடங்களில் போட்டி வேட்பாளர்கள் யாரும் இல்லை.

பா.ஜ.க.வில் 5 வேட்பாளர்களும், திரிணாமுல் காங்கிரசில் 6 வேட்பாளர்களும் என மொத்தம் 11 பேரும் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர். அவர்களில் எஸ். ஜெய்சங்கர் 2-வது முறையாக எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்படுகிறார்.

மேலும் செய்திகள்