மத்தியப்பிரதேசத்தில் ரூ.2 ஆயிரத்து 100க்கு இரு குடும்பங்களிடையே மோதல்: 11 பேர் காயம்
|மத்தியப் பிரதேசத்தில் 2,100 ரூபாய்க்கு இரு குடும்பங்களுக்கு இடையே ஏற்பட்ட கடுமையான மோதலில் 11 பேர் காயமடைந்தனர்.
போபால்,
மத்தியப் பிரதேசத்தின் இந்தூர் மாவட்டத்தில் உள்ள டடோடா கிராமத்தில் கிஷோர் சோஹன் என்பவர் தனது உறவினர்கள் எட்டு பேருடன் நரேந்திர முண்டேலு என்பவரிடம் ரூ.2,100-க்காக கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
அப்போது ஏற்பட்ட தகராறில் கிஷோரும், அவரது உறவினர்களும் முண்டேலைக் கடுமையாகத் தாக்கினர். பின்னர் அவர் மீதும் அவரது வீட்டின் மீதும் கற்களை வீசினர். சம்பவத்தில் அவரது வீட்டிற்கு வெளியே நிறுத்தப்பட்டிருந்த ஒரு மோட்டார் சைக்கிள் மற்றும் கார் சேதமடைந்தன.
இதனால், கடும் கோபமடைந்த நரேந்திர முண்டேல், தனக்கு ஆதரவாக சுமார் 90 பேர் கொண்ட கும்பலுடன், தடிகள் மற்றும் ஆயுதம் ஏந்தியவாறு கிஷோர் சோஹனின் இருப்பிடத்திற்கு சென்று அவரை தாக்கியதுடன், கிஷோரின் உறவினர்களையும் தாக்கினர். மேலும் அவர்கள் 14 மோட்டார் சைக்கிள்களுக்கு தீ வைத்தனர். இந்த தாக்குதலில் கிஷோரும், அவரது உறவினர்கள் உட்பட 11 பேர் பலத்த காயமடைந்தனர்.
இதுகுறித்து கிஷோர் சோஹன் அளித்த புகாரின் அடிப்படையில், நரேந்திர முண்டேல் மற்றும் 85 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. பதிலுக்கு நரேந்திர முண்டேலுவும் அளித்த புகாரின் அடிப்படையில் கிஷோர் சோஹன் மற்றும் எட்டு பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
போலீசாரின் துரித நடவடிக்கையின் காரணமாக அங்கு பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. தற்போது அப்பகுதி முழுவதும் போலீசார் தனது கட்டுப்பாட்டிற்குள் வைத்துள்ளனர். இது தொடர்பாக போலீசார் தொடர் விசாரணையின் ஈடுபட்டு வருகின்றனர்.