545 பணிகளுக்கு நடந்த சப்-இன்ஸ்பெக்டர் தேர்வில் கர்நாடகம் முழுவதும் 11 தேர்வு மையங்களில் முறைகேடு நடந்தது அம்பலம்
|545 பணிகளுக்கு நடந்த சப்-இன்ஸ்பெக்டர் தேர்வு முறைகேட்டில் மாநிலம் முழுவதும் 11 தேர்வு மையங்களில் முறைகேடு நடந்திருப்பது சி.ஐ.டி. விசாரணையில் அம்பலமாகி உள்ளது. முறைகேடு தொடர்பாக மற்றொரு போலீஸ்காரர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பெங்களூரு: 545 பணிகளுக்கு நடந்த சப்-இன்ஸ்பெக்டர் தேர்வு முறைகேட்டில் மாநிலம் முழுவதும் 11 தேர்வு மையங்களில் முறைகேடு நடந்திருப்பது சி.ஐ.டி. விசாரணையில் அம்பலமாகி உள்ளது. முறைகேடு தொடர்பாக மற்றொரு போலீஸ்காரர் கைது செய்யப்பட்டுள்ளார்.
11 தேர்வு மையங்களில் முறைகேடு
கர்நாடகத்தில் 545 பணிகளுக்கு நடந்த சப்-இன்ஸ்பெக்டர் தேர்வு முறைகேடு குறித்து சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த வழக்கில் பா.ஜனதா பெண் பிரமுகர், காங்கிரஸ் பிரமுகர்கள் மற்றும் உயர் போலீஸ் அதிகாரிகள் உள்பட 30-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டு விசாரணை நடத்தி வருகின்றனர். சப்-இன்ஸ்பெக்டர் குறித்த விசாரணையை சி.ஐ.டி. போலீசார் தீவிரப்படுத்தி உள்ளனர். இந்த நிலையில், சி.ஐ.டி. போலீஸ் விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளது.
அதாவது சப்-இன்ஸ்பெக்டர் தேர்வில் கலபுரகியில் உள்ள பா.ஜனதா பெண் பிரமுகருக்கு சொந்தமான பள்ளியில் நடந்த தேர்வு மையத்தில் தான் முறைகேடு நடந்திருப்பதாக முதலில் கூறப்பட்டது. இந்த நிலையில், சப்-இன்ஸ்பெக்டர் தேர்வு முறைகேட்டில் கைதான நபர்களிடம் கிடைத்த தகவல்களின் அடிப்படையில் பெங்களூரு, கலபுரகி உள்பட மாநிலம் முழுவதும் 11 தேர்வு மையங்களில் முறைகேடு நடந்திருப்பதை சி.ஐ.டி. போலீசார் கண்டுபிடித்துள்ளனர். பெரும்பாலும் வினாத்தாள்களில் தான் தேர்வு எழுதியவர்கள் முறைகேடு செய்திருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
மற்றொரு போலீஸ்காரர் கைது
அதே நேரத்தில் சப்-இன்ஸ்பெக்டர் தேர்வில் தேர்ச்சி பெற்றிருந்த 172 பேர், தேர்வில் முறைகேடு செய்து வெற்றி பெற்றிருக்கலாம் என்ற சந்தேகம் சி.ஐ.டி. போலீசாருக்கு எழுந்துள்ளது. அந்த 172 பேரில், இதுவரை 28 பேர் சி.ஐ.டி. போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்கள். மற்றவர்கள் முறைகேடு செய்திருப்பதற்கான சரியான ஆதாரங்கள் இல்லாததால், போலீசாரிடம் சிக்காமல் இருப்பதாக கூறப்படுகிறது.
இதையடுத்து, மற்றவர்களின் வினாத்தாள் உள்ளிட்டவை தடயவியல் ஆய்வுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அந்த ஆய்வு வந்த பின்பு முறைகேடு தொடர்பாக 144 பேரிடம் விசாரிக்க போலீசார் தீர்மானித்திருப்பதாக தெரிகிறது. இதற்கிடையில், சப்-இன்ஸ்பெக்டர் தேர்வு முறைகேடு தொடர்பாக தார்வார் மாவட்டத்தில் போலீஸ் பயிற்சி பெற்று வரும் போலீஸ்காரர் இஸ்மாயிலை நேற்று சி.ஐ.டி. போலீசார் கைது செய்துள்ளனர். இவரும், முறைகேட்டில் ஈடுபட்டு தேர்ச்சி பெற்றது தெரியவந்தது.