காரில் கடத்திய 102 கிலோ வெள்ளி கொலுசுகள் பறிமுதல்; தமிழகத்தை சேர்ந்த 2 பேர் கைது
|தாவணகெரேயில் உரிய ஆவணங்கள் இன்றி காரில் கடத்திய 102 கிலோ வெள்ளி கொலுசுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக தமிழகத்தை சேர்ந்த 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சிக்கமகளூரு;
102 கிலோ வெள்ளி கொலுசுகள்
தாவணகெரே போலீசார் நேற்று முன்தினம் அந்தப்பகுதியில் வாகன சோதனை நடத்தினார்கள். அப்போது அந்த வழியாக வந்த ஒரு காரை தடுத்து நிறுத்தினர். பின்னர் போலீசார் காரில் இருந்த 2 பேரிடம் விசாரணை நடத்தினர். அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்ததால் சந்தேகமடைந்த போலீசார், காரில் சோதனை நடத்தினர்.
அப்போது காரில் கிலோ கணக்கில் வெள்ளி கொலுசுகள் இருந்தன. அந்த வெள்ளி கொலுசுக்கான உரிய ஆவணங்கள் எதுவும் அவர்களிடம் இல்லை. இதுகுறித்து காரில் இருந்த 2 பேரிடமும் போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர்.
விசாரணையில், அவர்கள் தமிழ்நாட்டை சேர்ந்த செல்வம் (வயது 30), பாலாஜி (28) என்பதும், அவர்கள் சட்டவிரோதமாக வெள்ளி கொலுசுகளை கடத்தியது தெரியவந்தது. இதையடுத்து அவர்களை கைது செய்த போலீசார், 102 கிலோ எடை கொண்ட ரூ.20 லட்சம் மதிப்பிலான வெள்ளி கொலுசுகள் பறிமுதல் செய்யப்பட்டது.
52 சைலன்சர்கள் அழிப்பு
இதுகுறித்து தாவணகெரே போலீஸ் சூப்பிரண்டு ரிஸ்யந்த் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தாவணகெரே டவுனில் காரில் சட்டவிரோதமாக வெள்ளி கொலுசுகளை கடத்திய தமிழ்நாட்டை சேர்ந்த 2 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் தமிழ்நாட்டில் இருந்து வெள்ளி கொலுசுகளை கடத்தி வந்தார்களா அல்லது இங்கிருந்து தமிழ்நாட்டுக்கு கடத்தி சென்றார்களா என்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது.
தாவணகெரே நகரில் அதிக சத்தம் எழுப்பும் சைலன்சர்களை வைத்து இயங்கிய 50 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மோட்டார் சைக்கிள்களில் இருந்து 52 சைலன்சர்கள் பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்பட்டுள்ளது.
ரூ.1 கோடி அபராதம்
தாவணகெரே நகரில் கடந்த ஜனவரி மாதம் முதல் கடந்த ஜூன் மாதம் 30-ந்தேதி வரை போக்குவரத்து விதிகளை மீறியதாக 25 ஆயிரத்து 88 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு ரூ.1 கோடியே 3 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.
83 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. தாவணகெரே மாவட்டத்தில் சட்டம்-ஒழுங்கு சீராக உள்ளது. போலீசாரும் திறம்பட பணியாற்றி வருகிறார்கள். இவ்வாறு அவர் கூறினார்.